பீட்டர்சனுக்கு வாய்ப்பே கிடையாது: பயிற்சியாளர் பீட்டர் அதிரடி

பீட்டர்சனுக்கு வாய்ப்பே கிடையாது: பயிற்சியாளர் பீட்டர் அதிரடி

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனை மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அழைக்க வாய்ப்பே கிடையாது என அந்த அணியின் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பீட்டர்சனுக்கு கடந்த ஆண்டு கட்டாய ஓய்வளிக்கப்பட்டது. ஆனால் பீட்டர்சனோ மீண்டும் அணியில் இடம்பிடிக்க தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

இதனிடையே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக வரவுள்ள காலின் கிரேவ்ஸோ, “பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளது” என கருத்து தெரிவித்திருந்தார். மீண்டும் அணியில் இடம்பிடிக்க ஏதுவாக சுர்ரே அணிக்காக விளையாடுவதற்கு கடந்த வாரம் பீட்டர்சனும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ், பீட்டர்சனுக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பீட்டர்சனுக்கு வாய்ப்பு இல்லை. அதனால் அவர் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் விளையாடவுள்ள கேப்டன் அலாஸ்டர் குக் உள்ளிட்ட 16 வீரர்களுக்கும் உதவுவதிலேயே நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

2014 எங்களுக்கு மிகக் கடினமான காலமாக அமைந்தது. இப்போது மக்களும், நாங்களும் விரும்புகிற தாக்குதல் ஆட்டத்தை ஆடப் போகிறோம். தற்போதைய தருணத்தில் அப்படியொரு கிரிக்கெட் ஆட்டத்தின் மீதுதான் எங்களின் கவனம் உள்ளது. பீட்டர்சனை அணிக்கு அழைக்க வாய்ப்பில்லை என்றார்.

இங்கிலாந்து அணி, இந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி வரும் 13-ம் தேதி தொடங்குகிறது.

Leave a comment

Your email address will not be published.


*