இந்தியாவில் மரணதண்டனை கூடாது: மனித நேய மக்கள் கட்சி!

இந்தியாவில் மரணதண்டனை கூடாது: மனித நேய மக்கள் கட்சி!

இந்தியாவில் மரணதண்டனை கூடாது: மனித நேய மக்கள் கட்சி!

ரியாத்: “இஸ்லாமிய அடிப்படையிலான விசாரணைமுறை இல்லாதபோது, இஸ்லாமிய அடிப்படையிலான தண்டனையை எப்படி ஏற்க முடியும்?” என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஹாஜா கனி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா தலைநகர் ரியாதில் தமிழ் ஊடகப் பேரவைக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். நேர்காணலின் முழு விவரம் வருமாறு:

கேள்வி : மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக இயக்கத்தின் இலக்கு என்ன ?

பதில் : சுருக்கமாக சொல்வது என்றால் இயக்கத்தின் இலக்கு என்பது சமூகத்தின் குறைபாடுகள் களையப்பட வேண்டும்; சமூகம் நாளை அடைய வேண்டிய இலட்சியங்களை அடைய வேண்டும். இன்றைய சமூகத்திலுள்ள குறைபாடுகளை அகற்ற முனைப்பு காட்டினால், நாளை அடைய வேண்டிய இலக்குகளை அடைந்துவிடலாம்.

கல்வி, வேலைவாய்ப்பு, பொது ஊடகம் போன்ற விசயங்களில் தற்போது போல் இல்லாமல் இன்னும் திறன்பட செயல்படலாம். இதுதான் எங்களின் இலக்கு.

கேள்வி : இந்திய அரசியலில் முஸ்லிம்கள் எதிர்காலம் எவ்வாறு உள்ளது?

பதில் : தற்போது போன்று இல்லாமல் மிகவும் பிரகாசமாக உள்ளது. மிகபெரிய வீழ்ச்சிக்குப் பிறகு எழுச்சியே உள்ளது. உச்சநீதிமன்றம், “ஒரு செங்கல் கூட எந்த வித சேதாரமும் அடைய கூடாது” என்று கூறியிருந்த உத்தரவைமீறி பாபர் மஸ்ஜிதை இடித்தனர். அந்தச் சூழ்நிலையில் பலரும் எதிர்காலம் இருண்டு போய் விட்டது, இனி இந்தியாவில் நமக்கு பாதுகாப்பு இல்லை, நீதி கிடைக்குமா என்று அவநம்பிக்கையில் இருந்த நேரத்தில் 1995 ல் த மு மு க உதயம் ஆனது.

அதன் பின்னர் சமுதாயத்தில் மிகபெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. அதற்குமுன் இருந்த நிலைமை விட அதன் பின்பு உள்ள நிலையினை ஒப்பிட்டு சமுதாயம் மிகப் பெரிய விழிப்புணர்வு பெற்றுள்ளதை நாங்கள் உணர்ந்தோம்.

குறிப்பாக வடக்கை விட தெற்கே நமது சமுதாய பணிகள் விரைவாக மக்களைச் சென்றடைந்தது. சமூகம் அரசியல்மயமாக வேண்டும். அதாவது ஒவ்வொரு விசயத்திலும் பொருள் உணர்ந்து தெளிவான / தீர்க்கமான பார்வை கொண்ட சமூகம் உருவாகவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் சமூகம் இன்னும் வேகமாக மிகசிறந்த வெற்றி நோக்கி செல்லும்.

முஸ்லிம் சமூகம் பின்னடைவுக்கு முக்கியமாக உணர்வது சமூகத்தில் இருக்கும் அறியாமை.

மக்களிடையே பரவ வேண்டிய முக்கிய விழிப்புணர்வு விசயங்கள் பரவாமல் பரவ கூடாத செய்திகள் மிக வேகமாக பரவுதல் மூலம் சமுதாயம் பின்னோக்கி இழுக்கப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.

அன்று இருந்த இளைதலைமுறை வேறு; இன்று இருக்கும் இளைய தலைமுறை வேறு. இன்றைய சவால்களும் வேறு.

இன்று ஊடகம் ஒரு புது கதவைத் திறந்துள்ளது. இன்றைய இளையதலைமுறை ஒவ்வொருவரும் தனித்தனி ஊடகத்துக்குச் சமம். இதனை உணர்ந்து இளைய தலைமுறை அதன் பலனை சமூகத்திற்குக் கொடுக்க வேண்டும். அதற்கு த மு மு க பாடுபடும். அனைவரையும் ஓரணியில் இணைக்க முயற்சி செய்து அதற்கு உழைக்கும்.

கேள்வி : இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் சமநீதியுடனான ஆட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதா? பல வழக்குகளில் குற்றவாளிகள் என்று அப்பட்டமாக தெரிந்தும் அவர்கள் விடுவிக்க படுகிறார்கள். மற்றொருபுறம் அப்பாவிகள் என்று நிரூபணம் ஆன பின்பும் விடுவிக்கப்படாமல் சிறையிலிட்டுத் தண்டிக்க படுகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன ?

பதில் : இந்தியாவில் நீதிமுறை பற்றி நாம் ஒற்றை வரியில் எதிராகவோ ஆதரவாகவோ சொல்லிவிட முடியாது.

ஒரு மாநில முதலைமச்சரை 10 மணிநேரம் துருவி துருவி விசாரணை நடத்தி தண்டனை கொடுத்ததும் இதே நீதிதுறை தான். இதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இன்றைய பாரத பிரதமர் மோடியைப் பார்த்து நவீன நீரோ மன்னன் என்று கூறியதும் இந்திய நீதி துறை தான்.

குஜராத்தில் விசாரணை நடந்தால் அங்கு நீதி கிடைக்காது. எனவே வேறு மாநிலத்தில் வழக்குகள் மாற்ற பட வேண்டும் என்று கூறியதும் இதே நீதித்துறை தான்.

எப்பொழுதும் சில பின்னடைவும் சில முன்னேற்றமும் மாறி மாறி வருவதுதான் இயல்பு. இதை சமூக நீதியாக பார்க்காமல் பொதுவாக பாப்போம். கீழ் நீதி மன்றத்தின் மூலம் விடுவிக்க பட்டவன் மேல் முறையீடு மூலம் தண்டனை பெறுவதும் / கீழ் நீதி மன்றத்தின் மூலம் குற்றம் சுமத்தப் பட்டவன் மேல் முறையீடு மூலம் விடுவிக்கப்படுவதும் மாறி மாறி வருவது என்பது எல்லாம் நீதித்துறையின் இயல்புதான்.

மக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். சட்ட வலிமை இருந்தால் மட்டுமே இந்தியாவில் சூழ்நிலைகளைச் சரியாக எதிர்கொள்ள முடியும்.

இன்று தனி நபர்கள் போடக் கூடிய பொது நல வழக்குகள் அரசாங்கத்தையே பெரிய அளவில் பாதிக்கிறது. உதாரணம், டிராபிக் ராமசாமி எடுத்து கொள்ளுங்கள்.

சட்டபடி உறுதியாக நாம் போராடும் போது அதிலுள்ள நம்பிக்கை ஊட்டும் அம்சங்களை எடுத்து கொண்டு போராடும் போது விடியல் நிச்சயம் பிறக்கும். நம்பிக்கை ஊட்டி போராட்ட அழைப்பு விடுப்பதுதான் ஒரு அமைப்பின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அவநம்பிக்கை ஊட்டி ஓரமாக ஒதுங்க செய்து விட்டால் அதனால் விளைவுகள் மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும்.

இந்திய வரலாற்று குறிப்புகள் மூலம்கூட இதை ஒப்பிட்டு பார்த்து சரிகாண முடியும்.

இந்திய நீதித்துறையினை நாம் உற்று கவனித்தால், நேர்மைக்கு வெற்றி என்பதை விட வியூகம் வகுத்த செயல்பாட்டுக்கு வெற்றி என்பதை அவதானிக்கலாம்.

நேர்மை மற்றும் சிறந்த வியூகம் ஆகிய இரண்டிலும் சிறந்தவர்களாக மக்கள் தங்களைத் தயார் படுத்திக்கொண்டால், நிச்சயமாக நீதித்துறையிடமிருந்து நீதியைப் பெறமுடியும்.

கேள்வி : அரசியலில் எவ்வகையான வியூகம் அமைத்து செயல்பட உள்ளீர்கள்?

பதில் : தற்போதைய இந்திய தேர்தல் சூழல், வெற்றி என்பதே இலக்காக சென்று விட்டது. நாம் யாரிடம் இணைந்தாவது வெற்றியைப் பெற வேண்டும் என்றே ஒவ்வொரு அரசியல் கட்சியும் தள்ளப்பட்டுள்ளது.

சில கட்சிகளில் கொள்கை சிறப்பாக இருக்கும்; ஆனால் தொண்டர்கள் சிறப்பாக செயல்பட மாட்டார்கள்.

சில கட்சிகளில் தொண்டர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்; ஆனால் கொள்கை இருக்காது.

தேர்தல் நேரத்தில் எங்கள் முடிவுகளில் மாற்றங்கள் இருக்கும். நம்பகமானவர்களுடன் சேரவேண்டும். நம்மை இணைப்பவர்கள் நம் வெற்றியை மனதார விரும்ப வேண்டும்,; நட்பும் நம் வெற்றியை விரும்பும் கூட்டணியும் இருந்தால் முயற்சிப்போம். அவ்வகையில் சிறந்த வியூகங்கள் அமைப்போம்.

கேள்வி : கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு குறித்து என்ன கருதுகிறீர்கள்? அசதுத்தீன் உவைசியுடன் தேசிய அளவில் முஸ்லிம் கட்சிகள் கூட்டணி வைக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறதே?

பதில் : கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு ஒரு விசயத்தைத் தெளிவாக எடுத்துவைத்துள்ளது. வடக்கு போல் தெற்கு இல்லை; தெற்கு போல் வடக்கு இல்லை என்ற செய்தி அம்முடிவிலிருந்து தெளிவாக அறியமுடிகிறது.

தமிழகத்தில், குட்டி குட்டி கட்சிகள் மற்றும் பணம் படைத்தவர்கள் முதல் தேமுதிக, பாமக, மதிமுக, என பாஜக மிகப் பெரிய கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தபோதும் ஒரே ஒரு இடம் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

ஆக, தமிழகம் ஒரு தனிப்பாதை கொண்டது. இந்து முஸ்லிம் என்று பிரச்சனை எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. தமிழகத்தில் அந்த ஒரு நிலை ஏற்படுத்திட எப்போதும் நாம் காரணமாக இருக்க கூடாது.

பாஜக பார்வை எப்போதும் இந்துவா முஸ்லிமா என்பதுதான்!

முஸ்லிம்களின் பார்வை சமூக நீதியா? சமூக அநீதியா என்றுதான் இருக்கவேண்டும்.

தமிழர்களா? ஆரியர்களா? என்பதையே பார்க்க வேண்டும். தமிழன் என்ற வட்டத்தில் இருக்கிறோம். நமது தோழமை கட்சிகள் எல்லாம் நம்முடன் பயணிக்க கூடியவர்கள்.

திராவிடர்கள் இஸ்லாமியர்களை ஏற்றுகொள்ள காரணம் ஜாதியை எதிர்க்கிற மார்க்கம் மற்றும் சமத்துவம் போதிக்கிறது என்பதே. அதனால் நாம் இங்கு தமிழர்கள் என்ற வட்டத்தில் சமூகத்தின் அநீதியை எதிர்த்து தோழமையுடன் பயணிக்க வேண்டும். இந்து முஸ்லிம் என்று பிரித்து சிந்திக்கும் கட்சிகளுடன் இருந்தால் தமிழகத்தில் பின்னடைவு அதிகம் இருக்கும்.

வட நாட்டில் இருக்கும் தலைவர்கள், இந்து முஸ்லிம் என்ற பிளவு அதிகமாக இருக்கும் சமூகத்தில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அந்த நிலை இதுவரை ஏற்படாதிருக்கும்போது, அத்தகைய பிளவு சூழல் ஏற்பட நாம் காரணமாகிவிடக்கூடாது. எனவே தேசிய அளவில் அவ்வாறான கூட்டணி சிந்தனை ஏதும் நிச்சயமாக நமக்கில்லை.

கேள்வி : தமிழக முஸ்லிம்களிலுள்ள அனைத்து கட்சிகளையும் சேர்த்து ஒன்றாக தேர்தலைச் சந்திப்பது குறித்து உங்கள் நிலை என்ன?

பதில் : நதிகள் இணைப்பு திட்டம் போலதான் இது. நதிகளை இணைக்க முடியாது. ஆனால் இணைந்தால் நலம். அதை போலத்தான் இயக்கங்கள் இணைவதும்.

எல்லோரும் தலைவராக இருக்கும்போது இணையாது, மாறாக எந்தத் தலைமை சிறப்பாக உள்ளது என்பதை மக்கள் விளங்க வேண்டும். யார் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்; யார் மக்களுக்காக பேசுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு அசைக்க முடியாத சக்தியாக அந்தக் குறிப்பிட்ட இயக்கத்தை வலிமை படுத்தினால் மற்ற இயக்கங்களும் அவர்களுடன் இணைந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரும்.

முஸ்லிம் கட்சிகள் இணைவதற்கான பொதுவான பிரச்சனை இது என்றாலும் மற்ற முஸ்லிம் கட்சிகளுடன் இணைவதற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்.

கேள்வி : மரண தண்டனை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன ?

பதில் : இந்திய நாட்டில் மரண தண்டனை என்பது கூடாது. இங்கு ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களை மட்டுமே இந்தத் தண்டனை அதிகம் பாதிக்கிறது. காந்தியைக் கொன்ற கோட்சே தூக்குக்குப் பிறகு உயர் சாதி பார்ப்பனர்களில் ஒருவர் கூட இதுவரை தூக்கு தண்டனை மூலம் தண்டிக்கப்பட வில்லை. எனில், அச்சமூகத்தைச் சேர்ந்தவர் இத்தண்டனைக்கான குற்றமே செய்யவில்லையா?

நீதித்துறையை வெளியில் இருந்து ஒரு சக்தி அதிகமாக அழுத்துகிறது, அதன் தன்மை இந்தியாவில் அதிகம்.

மட்டுமன்று, இஸ்லாமிய முறைபடி சில குற்றங்களுக்கு மரண தண்டனை உண்டு. அதே சமயம் விசாரணையும் இஸ்லாம் கூறும்விதத்தில் வெளிப்படையாக, நீதமாக நடத்தப்படவேண்டும். இங்கு இஸ்லாமிய அடிப்படையிலான விசாரணை இல்லாமல் இருக்கும்போது, தண்டனை மட்டும் இஸ்லாம் முறைப்படி இருப்பதை ஏற்க முடியாது.

அப்சல் குரு மரண தண்டனையை நாம் எதிர்க்கிறோம். அதற்குக் காரணம், இஸ்லாமிய அடிப்படையிலான நீதி விசாரணை நடக்கவில்லை என்பதாலேயே. அதைப்போன்றே மற்ற மனிதர்களையும் பார்க்கிறோம்.

எங்கு இஸ்லாமிய முறைப்படி விசாரணையும் தண்டனையும் உள்ளதோ அங்கு நாங்கள் மரண தண்டனையை ஆதரிக்கிறோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு.

கேள்வி : மாற்று அரசியலுக்கான முயற்சி என்று தொடங்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சி, அதிக அளவில் பிற திராவிட கட்சிகளுடன் அமைத்து களம் காண்பதிலேயே உள்ளதே? இது எப்படி மாற்று அரசியல் சக்தி ஆக முடியும்?

பதில் : மாற்று அரசியல் என்பது லட்சிய அரசியல். மாற்று அரசியல் நோக்கி பயணிக்க சமுகத்தைத் தயார் படுத்தி கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு நாம் மாறுபடும் விதம் என்பது, மற்றவர்கள் புறக்கணிக்கும் மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து பேசும் விதத்தில்தான்.

மாற்று அரசியல் இதுதான். மற்றவர்கள் மௌனம் காக்கும் பிரச்சனையை நாம் பேசுவது மூலம், லட்சிய பாதை அடைவோம். அதுவரை எத்தனை தோல்விகள் வந்தாலும் அதை மீறி வெற்றி படைக்க முயற்சிப்போம்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*