ஏற்றுமதியாகும் இளநீர் ! சாதித்த சாமானியன் !

ஏற்றுமதியாகும் இளநீர் ! சாதித்த சாமானியன் !

ஏற்றுமதியாகும் இளநீர் ! சாதித்த சாமானியன் !

சைக்கிளின் இரண்டு பக்கமும் இளநீர் குலைகளை மாட்டிக் கொண்டு கால்கடுக்க நின்று கூவி கூவி விற்பனை செய்து வந்த இளநீர் வியாபாரி ஒருவர், தனது தொழிலை கொஞ்சம் மாத்தியோசித்ததால் இன்று அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இளநீர் விற்பதில் என்ன புதுமை என்கிறீர்களா? அதை அவரிடமே கேட்கலாம்.

திருச்சியில் வசிக்கும் இளநீர் வியாபாரி காஜாமுகமது தான் அந்தப் புதுமை மனிதர். சாதா இளநீரை, கார்விங் (செதுக்குதல்) செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார். இந்த யோசனை எப்படி வந்தது?

Tender Coconut

“திருநெல்வேலி மேலப்பாளையம்தான் என் சொந்த ஊர். 1979-ல் பிழைப்புதேடி குடும்பத்தோட திருச்சிக்கு எங்கப்பா அப்துல்காதர் வந்தார். எனக்கு படிப்பு ஏறவில்லை. கொஞ்சம் பணம் சேர்த்து லாட்டரி சீட்டு விற்கும் கடை வச்சேன். என் கடைக்குப் பக்கத்திலேயே இளநீர் கடை வைத்திருந்தார் ஒரு நண்பர். அவர் சாப்பிடப் போகும் நேரத்தில் நான்தான் அந்தக் கடையைப் பார்த்துக்கொள்வேன். அந்த நேரங்களில் இளநீர் கேட்டு வருகிறவர்களுக்கு சீவி கொடுப்பேன். அப்படியே மெள்ள மெள்ள இளநீரை லாவகமாக வெட்டிக் கொடுக்க கற்றுக்கொண்டேன். பிறகு முழுநேரமாக இளநீர் விற்பனையில் இறங்கி விட்டேன்.

ஆரம்பத்தில் சிறிய முதலீட்டில்தான் தொடங்கினேன். சைக்கிளில் இளநீர்களைக் கட்டிக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி வந்துதான் வியாபாரம் செய்தேன். பிறகு நேரடியாக இளநீர்களை கொள்முதல் செய்ய ஆரம்பித்தேன்.

இப்போ இருக்கும் இளந்தலைமுறையினர் இளநீர் வாங்கிக் குடிப்பதை கவுரவக் குறைவா பார்க்கிறாங்க. இளநீர் இயற்கையானது, உடம்புக்கு நல்லது என்று தெரிந்தாலும் மரத்தடியிலும் தள்ளுவண்டியிலும் நின்று இளநீர் குடிக்க மறுக்கிறார்கள். அதனால் எல்லோருக்கும் உகந்த வகையில் பெட்டிக்கடையில் இருந்து பெரிய மால் வரை இளநீர் விற்க என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.

அந்த நேரத்துலதான் ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் நண்பர் நெல்லையப்பன், எனக்கு இளநீர் வேணும், நீ அதை மட்டையில்லாமல் சீவி ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியுமான்னு கேட்டார். அதற்கு ஒப்புக் கொண்டேன். அவர் அங்கிருந்து இரண்டு சாம்பிள் இளநீர் அனுப்பினார். அந்த இளநீர் காய்கள், பச்சைமட்டை நீக்கப்பட்டு, சின்னப் பந்துபோல உருண்டையாக இருந்தது. அந்த இளநீர் காய்களைப்போல நமது இளநீர் காய்களை உருமாற்ற என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன். என் மகன் சதாம் உசேன் உதவியுடன் இணையதளத்தில் அதற்கான வழிகளைத் தேடினேன். அதற்கான கருவிகளை உலகம் முழுவதும் தேடி அலைந்தோம், அது கோவை யிலேயே கிடைக்கிறது என்று தெரியாமல்.

tender Coconut1

இளநீரை கார்விங் செய்து மட்டையை நீக்கும் இயந்திரங்களை கோவையில் வாங்கினேன். இந்த இயந்திரங்களின் நடுவில் இளநீரை வைத்து, சுழலவிட்டுக்கொண்டே இருந்தால் மேலிருக்கும் மட்டை சீவப்படும். பிறகு அதன் அடிப்பகுதி மற்றும் தலை பகுதிகளைத் தனியாக இன்னொரு இயந்திரத்தின் உதவியுடன் நறுக்கிவிடுகிறோம். மட்டை நீக்கப்பட்ட இளநீரை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி, உலரவைத்து மெல்லிய பாலித்தீன் கிங்க் ராப் மூலம் பேக்கிங் செய்கிறோம்.

tender Coconut2மட்டை நீக்கப்படாத இளநீர் 2 கிலோ வரை இருக்கும். கார்விங் முறையில் மட்டை நீக்கப்படும் இளநீரின் எடை அளவு 800 கிராம் அளவுக்குக் குறைந்துவிடும். ஆரம்பத்தில் காய்களை மட்டை நீக்க, ரம்பம் மூலம் அறுக்கும் இயந்திரத்தில் அதிகம் சிரமப்பட்டோம். அதிக காய் சேதாரமானது. தவிர, மட்டை நீக்கப்பட்ட இளநீரில் கை பட்டுவிட்டால் அதன் தன்மை மாறிவிடும். இப்படியான நடைமுறை சிக்கல்கள் எல்லாம் இருந்தன. அதையெல்லாம் தாண்டித்தான் சரியான தரத்துக்கு வர முடிந்தது.

இளநீர் ஏற்றுமதியைப் பொறுத்தவரை தாய்லாந்துதான் முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டு இளநீர் பஞ்சுபோல இருக்கும். இளநீரில் 200 மில்லி தண்ணீர்தான் இருக்கும். நம்ம ஊர் இளநீர் கெட்டியாக இருக்கும். 400 – 600 மில்லி வரை தண்ணீரும் இருக்கும். தாய்லாந்து இளநீரைவிட கூடுதல் சுவையுடனும் இருக்கும். இந்த இளநீர் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜ்-ல் பாதுகாத்து வைத்தால், 30 நாளுக்கு மேல் வைத்திருக்கலாம். நாங்கள் ரெடி செய்த இளநீரை முதற்கட்டமாக எங்களிடம் இளநீர் வாங்கும் சில்லறை வியாபாரிகளிடம் கொடுத்து விற்கச் சொன்னேன். சாதாரண இளநீருடன், ஒரு பக்கெட்டில் பேக்கிங் செய்யப்பட்ட 20 இளநீரையும் சேர்த்து வாங்கிச் சென்று விற்கிறார்கள்.

இந்த இளநீரை வெட்டுவதற்கு வீட்டில் இருக்கும் கரண்டி போதுமானது. இதனால் திருச்சியில் பரவலாக இந்த இளநீர் அறிமுக மாகி வருகிறது. அதிக இடத்தை அடைக்காது என்பதால் இந்த இளநீரை கூல்டிரிங்ஸ் விற்கும் இடம், ஷாப்பிங் மால் என எளிதாக விற்கலாம்.
என் தொடர்முயற்சியின் பலனாய், முதற் கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு 6 ஆயிரம் இளநீர் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஓர் இளநீரை மொத்த விலையில் ரூ.20-க்கு விற்கிறேன்.

சில்லறைக் கடைகளில் இதை 25-க்கு விற்கிறார்கள். கூலி வேலை செய்யத் தொடங்கிய நான் இன்று பத்து பேருக்கு வேலை தரும் அளவுக்கு வளர்ந்திருக்கேன் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

தொழில் பழையது என்றாலும், புதிய கோணத்தில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அதை மாத்தியோசித்த காஜாமுகமது பாராட்டப்பட வேண்டியவர்!

Leave a comment

Your email address will not be published.


*