பவுன்சர் தாக்கி காயமடைந்த பிலிப் ஹியூஸ் உயிரிழப்பு

பவுன்சர் தாக்கி காயமடைந்த பிலிப் ஹியூஸ் உயிரிழப்பு

அதிவேக பவுன்சர் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பிலிப் ஹியூஸ் தனது 25-வது வயதில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இடது கை பேட்ஸ்மேனான 25 வயது பிலிப் ஹியூஸ், ஆஸ்திரேலியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியிலும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் ‘ஷெப்பீல்டு ஷீல்டு’ கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டிகள் நடந்து வந்தன. இதில் தெற்கு ஆஸ்திரேலியா-நியூ சவுத் வேல்ஸ் அணிகள் இடையிலான 4 நாள் ஆட்டம் சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதலில் பேட் செய்த தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் பிலிப் ஹியூஸ். சிறப்பாக ஆடிய அவர் அபாட் வீசிய பவுன்சரை அடித்து ஆட முற்பட்டார். ஆனால் அவருடைய கணிப்பு தப்பவே, பந்து அவருடைய இடது தலையில் தாக்கியது. அதனால் மைதானத்தில் சரிந்து விழுந்தார்.

இதையடுத்து சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹியூஸுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஹியூஸின் உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் அவர் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்து வந்தார்.

ஹியூஸ் உயிருக்கு போராடி வந்த செய்தி கேட்டு அனைத்து வீரர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதால் ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பை போட்டியின் அனைத்து ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

தெற்கு ஆஸ்திரேலியா – நியூ சவுத்வேல்ஸ் இடையிலான ஆட்டம் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த ஆட்டங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

தற்போதைய நிலையில் போட்டிகளை நிறுத்தியிருக்கிறோம். அதுதான் சரியான முடிவு என நினைக்கிறோம். இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி இடையிலான பயிற்சி உள்ளிட்ட எதைப் பற்றியும் இப்போது பேசமுடியாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹியூஸ் அணிந்திருந்தது பழைய மாடல் ஹெல்மட்

நவீன மாடல் ஹெல்மெட்டை அணியாமல் பழைய மற்றும் மெல்லிய ஹெல்மட்டை ஹியூஸ் உபயோகித்ததாக பிரிட்டனை சேர்ந்த ஹெல்மட் தயாரிப்பு நிறுவனமான மசூரி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ஹியூஸ் அணிந்திருந்த ஹெல்மட் தொடர்பாக அவர் விளையாடிய போட்டியின் வீடியோ பதிவின் மூலம் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். பந்து ஹெல்மட் கிரிலுக்குப் (தடுப்பு) பின்னால் மண்டை ஓட்டுப் பகுதிக்கு கொஞ்சம் கீழே தாக்கியிருக்கிறது.

பந்துக்கு ஏற்றவாறு ஒரு பேட்ஸ்மேன் உடலை வளைத்து ஆடும்போது கழுத்து மற்றும் தலைக்கு இடையிலான பகுதியை ஹெல் மட்டால் முழுவதுமாக பாதுகாக்க இயலாது” என குறிப்பிட்டுள்ளார்.

மசூரி கடந்த ஆண்டு ஆகஸ்டில் நவீன மாடல் ஹெல்மெட்டை அறிமுகம் செய்தது. ஆனால் அந்த ஹெல்மட்டை ஹியூஸ் அணியவில்லை என தெரியவந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*