கூடங்குளம் அணுஉலையில் தொடர்ந்து கோளாறுகள்

கூடங்குளம் அணுஉலையில் தொடர்ந்து கோளாறுகள்

கூடங்குளம் அணுஉலையில் தொடர்ந்து கோளாறுகள்- மத்திய அரசிடம் தமிழக அரசு வெள்ளை அறிக்கை கோர வேண்டும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை:

கடந்த தினங்களுக்கு முன்பு கூடங்குளம் அணுஉலையில் உள்ள முதல் அலகில் டர்பைன் என்று சொல்லக்கூடிய விசையாழியின் கத்திகள் உடைந்து அவ்விசையாழிகள் கடுமையாக சேதமாகியுள்ளதென்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு அணுஉலையின் வால்வில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக ஆறு ஊழியர்கள் பலத்த காயத்திற்கு இலக்கானார்கள். ஜுலை 2013ல் கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு செயல்பாட்டிற்கு வந்ததாக அறிவிக்கப்ட்ட பிறகு 14 மாதங்கள் கடந்த பிறகும் கூட உலக தரம் வாய்ந்த அணு உலை என்று அரசு தரப்பினரால் மெச்சப்பட்ட கூடங்குளம் அணுஉலை தொடர்ந்து முக்கல் முனங்கல்களுடன் அரைவேக் காட்டதனமாகவே செயல்பட்டு வருகின்றது.

கூடங்குளம் அணுஉலையின் செயல்பாடுகள் தொடர்பாக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆகஸ்ட் 7 அன்று சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கையில் நான் உரையாற்றும் போது “கூடங்குளம் அணுஉலையின் செயல்பாட்டை தற்போது நிறுத்தி வைத்துள்ளார்கள். மே 26 முதல் ஜூன் 27 வரை ஒரு மாத காலத்திற்கு 3.25 கோடி ரூபாய் அளவிற்கு 6 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கின்றார்கள். எதற்காக என்றால், அதில் இருக்கக்கூடிய (நீராவி ஆக்கி) Steam ஜெனரேட்டர் சரியான முறையில் நீராவியை உற்பத்தி செய்யாததன் காரணமாக இந்த டீசலைப் பயன்படுத்தி அந்த நீராவியை உற்பத்தி செய்வதற்கு அதை வாங்கியிருக்கின்றார்கள். காரணம், இதை சப்ளை செய்த ரஷ்ய நிறுவனம் தரமற்ற பொருட்களை நமக்குக் கொடுத்திருக்கின்றது என்ற தகவல் இருக்கின்றது” என சில குறைகளை சுட்டிக்காட்டினேன்.

இதற்கு பதிலளித்த எரிசக்தித் துறை அமைச்சர் திரு. நத்தம் விஸ்வநாதன் கூடங்குளம் அணுஉலையின் முதல் அலகு முழுமையாக உற்பத்திச் செய்வதாகவும், “சந்தேகப்படுவதற்கோ அல்லது நீங்கள் ஐயமுறுவதற்கோ ஏதுமில்லை இதுபோன்றுதான் எந்தவித பாதிப்புமின்றி சிறப்பாக வெற்றிகரமாக அங்கு முதல் அலகு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று சொன்னதுடன் இரண்டாவது யூனிட்டின் மூலமாக அடுத்த மாதம் 1000 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டம் அனேகமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள், ஒரிருமாதம் காலதாமதம் ஆனாலும் கூட அந்த யூனிட் சிறப்பாக மின் உற்பத்தியை தொடங்கவிருக்கிறது. அதற்கான பணிகள் முடிகின்ற தருவாயில் உள்ளது மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தேவையில்லாமல் சந்தேகத்தை எழுப்பி, புதுப்பிரச்சினையை மீண்டும் உருவாக்கிட முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

எரிசக்தித் துறை அமைச்சர் திரு. விஸ்வநாதன் இரண்டாவது அலகு ஆகஸ்டில் உற்பத்தித் தொடங்கும் என்று குறிப்பிட்டார். இரண்டாவது அலகும் உற்பத்தியை தொடங்கவில்லை. முதல் அலகில் இன்னும் வர்த்தக ரீதியான உற்பத்தியை தொடங்க வில்லை என்று இயக்குனர் சுந்தர் இப்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கூடங்குளம் அணுஉலை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இவ்வணுஉலை செயல்படுத் தப்படாலும் பாதுகாப்பிற்கான 17அம்சங்களில் 7 அம்சங்களை மட்டுமே நிறைவேற்றி மற்றவற்றை நிறைவேற்ற வெறும் உத்திரவாதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் அணுஉலை தொடங்க அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்திய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன் கூடங்குளம் அணுஉலையில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் தரமற்றவை என்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

உண்மையிலேயே கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதென்றும், அணுஉலை உபயோகத்திற்கு ஊழல்கள் நிறைந்த ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட அனைத்தும் தரமற்ற கருவிகள் எனவும் வணிகத்திற்காக மின்சாரம் தயாரிப்புக்கு முன்பே டர்பைன் உடைந்து அது மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், உடனே 3 மற்றும் 4 அலகுகள் தொடங்குவதற்கான பணிகளை நிறுத்த வேண்டும் எனவும் இந்திய கடற்படையின் முன்னால் தளபதி திரு ராம்தாஸ் தலைமையிலான குழு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கூடங்குளம் அணுஉலையில் என்ன நடக்கின்றது என்பது மாயமாகவே உள்ளது. திட்ட இயக்குனர் திரு. சுந்தர் முன்னுக்குபின் முரணான தகவல்களையே தந்துக் கொண்டிருக்கிறார். 8 கோடி தமிழக மக்களின் வாழ்வுரிமை தொடர்புடையது கூடங்குளம் அணு உலை. எனவே உடனடியாக தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு கூடங்குளம் அணுஉலையின் முதல் அலகின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் வெள்ளை அறிக்கையை கோர வேண்டும். அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இப்பிரச்னையில் மெத்தனம் காட்டாமல் விரைந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையீல் ஈடுபடவேண்டும். கூடங்குளத்தில் 3ம் 4ம் அலகுகள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது.

ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட சுகோய் 200 ரக விமானம் ஒன்று அண்மையில் புனே நகருக்கே அருகே விழுந்து நொறுங்கியது. இதன் விளைவாக இந்திய விமானப் படை ரஷ்யாவிடமிருந்து வாங்கிய 80ஆயிரம் கோடி மதிப்பிலான 200 சுகோய்-30 ரக விமானங்களை பாதுகாப்புக் குறைவு காரணமாக தரையிறக்கி மறுஆய்வு செய்கிறது. கூடங்குளத்திற்கும் இந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது. வரும் முன் காக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

(எம்.எச். ஜவாஹிருல்லா)

thanks to : tmmk.in

Leave a comment

Your email address will not be published.


*