வெள்ளையனே வெளியேறு என நேதாஜி ஆயுதம் ஏந்தினால், அவர் விடுதலைப் போராளி. அதையே இராக் மக்கள் செய்தால் அவர்கள் தீவிரவாதி – ஆளூர் ஷாநவாஸ்

வெள்ளையனே வெளியேறு என நேதாஜி ஆயுதம் ஏந்தினால், அவர் விடுதலைப் போராளி. அதையே இராக் மக்கள் செய்தால் அவர்கள் தீவிரவாதி – ஆளூர் ஷாநவாஸ்

பொய் வழக்கில் ஆயிஷா கைது செய்யப்பட்டபோது, ‘மனித வெடிகுண்டு ஆயிஷா கைது’ என எழுதியவர்கள், பின்னர் அவர் குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டபோது பதுங்கிக் கொண்டார்கள்.

‘கோவை குண்டுவெடிப்பின் பின்னணியே மதானிதான்’ என்று அட்டைப்பட செய்தி வெளியிட்டவர்கள், பின்னர் அவர் அவ்வழக்கில் குற்றமற்றவராக விடுதலையானபோது பம்மி விட்டார்கள்.

‘ரயிலில் குண்டுவைத்தது குணங்குடி ஹனீபாதான்’ என கட்டுரை தீட்டியவர்கள், பின்னர் அதில் அவருக்குத் தொடர்பில்லை என தெரியவந்ததை மறைத்து விட்டார்கள்.

‘பாகிஸ்தான் உளவாளி தமீம் அன்சாரி கைது’ என பரபரப்பு ஏற்படுத்தியவர்கள், அவரை வெறும் வெங்காய வியாபாரிதான் எனச் சொல்லி நீதிமன்றம் விடுவித்ததை அமுக்கி விட்டார்கள்.

‘திருவள்ளூர் இந்துமுன்னணி கொலை வழக்கில் அல்-உம்மாவினர் கைது’ என தலைப்புச் செய்தி வாசித்தவர்கள், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டதை சொல்ல மறுக்கின்றார்கள்.

இராக்கில் தீவிரவாதிகள் இந்திய செவிலியர்களை கடத்திவிட்டார்கள், கொடுமைப் படுத்தி விட்டார்கள், கொடூரமாக நடத்தி விட்டார்கள் என்றெல்லாம் கடந்த ஒருமாத காலமாக ஓயாமல் கதை வசனம் எழுதியவர்கள், இப்போது மீண்டு வந்த செவிலியர்களின் வாக்குமூலத்தைக் கேட்டு, தமது தவறுகளுக்காக மன்னிப்பா கேட்பார்கள்?

இராக்குக்குள் உனக்கென்னடா வேலை என அமெரிக்காவை கேள்வி எழுப்ப எவனுக்கும் துப்பில்லை. இராக்கை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஆள்வதை எடுத்துரைக்க எவனும் தயாரில்லை. இராக் வளத்தை அம்மண்ணுக்குத் தொடர்பில்லாத எவனோ ஒருவன் சுரண்டுவதை அம்பலப்படுத்த எவனுக்கும் துணிவில்லை. அம்மண்ணின் மைந்தர்கள் துப்பாக்கி தூக்கினால் மட்டும், கதை வசனம் எழுத வரிசை கட்டி வந்துவிடுகிறார்கள்.

வெள்ளையனே வெளியேறு என நேதாஜி ஆயுதம் ஏந்தினால், அவர் விடுதலைப் போராளி. அதையே இராக் மக்கள் செய்தால் அவர்கள் தீவிரவாதி.

ஊடகங்களே! உங்கள் பொய்ப் பரப்புரைகளின் ஆயுள் மிக மிக குறைவு என்பதை, இராக்கிலிருந்து நாடு திரும்பியிருக்கும் செவிலியர்களின் வாக்குமூலங்கள் உணர்த்திவிட்டன.

மோடியை தூக்கிப் பிடித்தீர்கள்; முப்பது நாட்களிலேயே அம்பலப்பட்டீர்கள். இராக் கிளர்ச்சியை இழிவு செய்தீர்கள்; இருபது நாட்களிலேயே அசிங்கப்பட்டு நிற்கிறீர்கள்.

வாய்மையே வெல்லும்!

ஆளூர் ஷாநவாஸ்

Leave a comment

Your email address will not be published.


*