நார்வேயில் 24 மணி நேரமும் நடுவானில் சூரியன் – மக்கா நேரப்படி நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள்!

நார்வேயில் 24 மணி நேரமும் நடுவானில் சூரியன் – மக்கா நேரப்படி நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள்!

அசாதாரணமான பூகோள பிரச்சினை காரணமாக பெரும்பாலான நார்வே(ஐரோப்பிய நாடு) முஸ்லிம்கள் இம்முறை நோன்பை புனித மக்கா நகரின் கால அட்டவணைக்கு அமைய பிடித்து வருகின்றனர். நார்வேயில் இம்முறை நோன்பு சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின் கோடைகாலத்தில் வந்துள்ளது. தூர வடக்கில் இருக்கும் நோர்வே போன்ற நாடுகளில் இந்தக் காலத்தில் சூரியன் மறையாது என்பதால் அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பை பிடிப்பதில் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடைசியாக 1980 களின் மத்தியிலேயே கோடைகாலத்தில் ரமழான் மாதம் வந்துள்ளது. இந்…நிலையில் நார்வேயின் வடக்கு பிராந்திய நகரான ட்ரொம்சொவிலிருக்கும் முஸ்லிம் சமூகத்தினர் மக்காவின் கால அட்டவணைப்படி நோன்பு நோற்று வருகின்றனர்.

சுமார் 1000 முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்துவரும் ட்ரொம்சொ விலில் பெரும்பான்மையாக சோமாலிய அகதிகளே உள்ளனர். வடக்கு நோர்வேயின் இஸ்லாமிய மையத்தில் பணியாற்றும் ஹஸன் அஹமட் கூறும்போது, “சூரியன் மறைவதில்லை. 24 மணி நேரமும் அது நடுவானிலேயே இருக்கிறது” என்றார்.

இதனால் சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை நோன்பு பிடிக்கும் விதியை இங்கு நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. எனவே மாற்று தீர்வு தேவை.

“எமக்கு ஃபத்வா கிடைத்துள்ளது. எம்மால் நெருங்கிய இஸ்லாமிய நாட்டின் கால அட்டவணைக்கு அமையவோ அல்லது மக்காவின் கால அட்டவணைக்கு அமையவோ நோன்பை கடைப்பிடிக்க முடியும்” என்றும் அஹமட் கூறினார். இதனால் நள்ளிரவிலும் சூரியன் இருக்கும் நிலையில் தாம் மக்காவின் கால அட்டவணைக்கு அமைய நோன்பு பிடித்துவருகிறோம் என்று ட்ரொம்சொ பள்ளிவாசலின் முகாமையாளர் சன்ட்ரா மரியம் மவு குறிப்பிட்டுள்ளார். இதன்படி மக்காவில் அதிகாலை 5 மணிக்கு சூரியன் உதித்தால் ட்ரொம்சொ முஸ்லிம்கள் நோன்பு பிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

“அங்கு சூரியன் உதிப்பது மற்றும் மறைவதில் ஸ்திரமான நேரம் இருப்பது நோன்பு மற்றும் தொழுகைகளை சமநிலையுடன் செய்ய உதவுகிறது” என மரியன் மவு குறிப்பிட்டுள்ளார். “எவ்வாறாயினும் ஆர்ட்டிக் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் நோன்பு பிடிப்பதில் தொடர்ந்து சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் பல மதத் தலைவர்கள், அமைப்புகளுக்கு இடையில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது” என சுவீடன் இஸ்லாமிய லீக்கின் தலைவர் ஒமர் முஸ்தபா குறிப்பிட்டார். எனினும் இந்த விடயத்தில் ஒவ்வொரு தனிநபரின் கையிலேயே முடிவு இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஒமர் முஸ்தஃபா, இஸ்லாம் பல தீர்வுகளை தந்திருப்பதாகவும் கூறினார்.

நன்றி: nidur.info

Leave a comment

Your email address will not be published.


*