அவசரப்பட்டு (தொழுகையில்)திருடனாகிவிடாதீர்கள் ! ! !

அவசரப்பட்டு (தொழுகையில்)திருடனாகிவிடாதீர்கள் ! ! !

அமைதி தொழுகையின் அங்கங்களில் ஒன்றாகும். அமைதியற்ற தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. தொழுகையில் அமைதியின்மை ருகூவிலும் ஸுஜுதிலும் முதுகை நேராக வைக்காமலிருப்பது ருகூவிலிருந்து எழுந்து நேராக நிற்காமலிருப்பது இரு ஸஜ்தாக்களுக்கு மத்தியில் சிறு இருப்பில் முறையாக அமராதிருப்பது இவை அனைத்தும் பெரும்பாலான தொழுகையாளிகளிடம் நாம் பரவலாகக் காணும் செயலாகும். இவ்வாறு அவசரமாக தொழும் தொழுகையாளிகள் தொழாத பள்ளிவாயில்களே கிடையாது. சந்தேகமின்றி இது தவறான செயலாகும். இவ்வாறு தொழுபவர்களை இதன் விபரீதங்களைக் கூறி எச்சரிக்கை செய்வது அவசியமாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

திருடுபவர்களில் திருட்டால் மிகக் கெட்டதிருடன் தொழுகையை திருடுபவனே! என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! தொழுகையை எவ்வாறு திருடுவர்? என்று கேட்டனர். அதற்கு தொழுகையின் ருகூஃவையும் ஸுஜுதையும் முறையாக நிறைவேற்றாதவனே -தொழுகையை திருடுபவன்- என்று நபி(ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: அஹமத் 21591)

ருகூவிலும் ஸுஜுதிலும் முதுகை நேராக வைக்கும்வரை ஒருவரின் தொழுகை நிறைவேறியதாகாது. (அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்பத்வீ (ரலி) நூல்: அபூதாவூத் 729)

அபூஅப்துல்லாஹ் அல்அஷ்அரீ (ரலி)அவர்கள் கூறுகிறார்கள். நபி(ஸல்)அவர்கள் தோழர்களுக்கு தொழுகை நடத்திவிட்டு அவர்களில் சிலருடன் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது (பள்ளியில்) நுழைந்த ஒருவர் தொழ ஆரம்பித்தார். -கோழி கொத்துவதைப்போல்- மிகவிரைவாக ருகூவு ஸுஜுது செய்து தொழுது கொண்டிருந்தார். இதனை கவனித்த நபி(ஸல்)அவர்கள், இவரைப் பார்த்தீர்களா? காகம் இரத்தத்தை கொத்துவது போல் தனது தொழுகையில் கொத்துகிறார். இவ்வாறு தொழும் வழமையுடன் மரணிப்பவர் முஹம்மது(ஸல்)அவர்களின் மார்க்கம் அல்லாத -வேறு- மார்க்கத்தில் தான் மரணிக்கின்றார். விரைவாக ருகூவு ஸுஜுது செய்பவருக்கு உவமை பசியோடிருப்பவர் ஓரிரு பேரீத்தம் பழங்களை சாப்பிடுவதை போன்றதாகும். அவை அவரது பசிக்கு போதுமானதல்லவே! என்று கூறினார்கள். (நூல்: இப்னுகுசைமா)

ஜைது பின் வஹப் அவர்கள் கூறிகிறார்கள். ஹுதைஃபா(ரலி)அவர்கள் ருகூவு ஸுஜுதை பரிபூரணமாக செய்யாத ஒருவரைக் கண்டார்கள். அவரிடம் நீர் தொழவில்லை. நீர் இவ்வாறு தொழும் வழமையுடன் மரணித்துவிட்டால் நிச்சயமாக நபி(ஸல்)அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டிய மார்க்கம் அல்லாத பிறமதத்தில் மரணித்தவராகி விடுவீர் என்று கூறினார்கள். (நூல்: புகாரீ)

தொழுகையை அமைதி இல்லாமல் தொழது கொண்டிருப்பவரிடம் அவரின் தவறை உணர்த்தப்பட்டால் அப்போது அவர் தொழுத தொழுகையை அமைதியுடன் திரும்பத் தொழவேண்டும். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள், அவ்வாறு அமைதியின்றி தொழுத மனிதரை பார்த்து, அவர்தொழுது முடித்தபின் இவ்வாறு கூறினார்கள்.

நீர் திரும்பிச் சென்று மீண்டும் தொழுவீராக! ஏனெனில் நீர் -முறையாக- தொழவில்லை. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ 757)

அமைதியுடன் தொழும் சட்டம் தெரிவதற்கு முன்னர் அவசரமாக தொழுத தொழுகைகளை மீண்டும் தொழவேண்டியதில்லை. ஆனால் அதற்காக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யவேண்டும்.

Leave a comment

Your email address will not be published.


*