நண்பனே, நண்பனே, நண்பனே!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

நண்பனே, நண்பனே, நண்பனே!

‘உன் நண்பனைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்று ஒரு சொல் வழக்கு உண்டு. நட்பு என்பது அந்த அளவுக்கு மிகவும் நெருக்கமான, இனிமையான ஓர் உறவு. மிகத் தூய்மையானதும்கூட. ஆனால், இன்றைய நட்பையும், ‘நண்பர்கள்’ என்று சொல்லிக் கொள்பவர்களின் நடத்தைகளையும் பார்க்கும்போது வேதனையும் வெறுப்பும்தான் மிஞ்சுகின்றன.
நண்பர்கள் என்றால் – அதுவும் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் என்றால், வகுப்பைக் கட் அடிப்பது, ஊர் சுற்றுவது, கும்பலாகச் சேர்ந்துகொண்டு பெண்களைச் சீண்டுவது, பார்ட்டி என்னும் பேரில் மது அருந்துவது இவை போன்ற அருவருப்பான செயல்களையே நட்பின் அடையாளங்களாய் வைத்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் ஒரு மாணவன் செய்யவில்லை என்றால் நட்பு வட்டாரத்தில் இருப்பதற்கே தகுதியில்லாதவனாய் எள்ளி நகையாடப்படுவான்.
கல்லூரி நண்பர்கள்தான் இந்த இலட்சனம் என்றால் அலுவலக நண்பர்களின் ‘குணாதிசயங்கள்’ பற்றிக் கேட்கவே வேண்டாம். மாதக் கடைசியில் நாம் சிரமப்பட்டுக் கொண்டிருப்போம். அந்த நேரம் பார்த்து நண்பர் கடன் கேட்பார். இல்லை என்றால் அவ்வளவுதான். முகத்தை ‘உம்’ மென்று தூக்கி வைத்துக் கொள்வார்.
உண்மையில் நட்பு என்பது இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. நட்பு குறித்தும் நண்பர்கள் குறித்தும் இஸ்லாம் நிறைய வழிகாட்டலை வழங்கியுள்ளது. நண்பர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் அது அழகாக கற்றுத் தந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடத்தில் அதிக அன்பு செலுத்துவார். தோழர்கள் ஒவ்வொருவரும் ‘இறைத்தூதர் நம்மீதுதான் பேரன்பு கொண்டுள்ளார்’ எனும் கருதும் வகையில் அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்துவார்.
முதலில் நல்லவர்களை நண்பர்களய்த் தேர்ந்தெடுக்க வேண்டும். உயர்ந்த சிந்தனையும் உன்னத பண்புகளும் கொண்டவர்கள் நமக்கு நண்பர்களாய் வாய்த்தால் அவர்களிடமிருந்து நமக்கு நன்மையே கிடைக்கும். ‘சரியாப் போச்சு. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருபது வயது இளைஞன் அறுபது வயது ஆன்மிகப் பெரியவரிடம் போய் நட்பு வைத்துக் கொள்ள முடியுமா’? என்று கேட்கலாம். வயது இருபதா, அறுபதா எனன்பது பிரச்னை அல்ல. யாரிடம் நட்பு கொண்டாலும் அவர் அடிப்படையில் நல்லவரா என்பதை ஆராய்ந்து கொள்ளுங்கள்.
ஏனெனில், நாம் உளரீதியாக யார் மீது அதிக அன்பு கொள்கிறோமோ அவருடைய தாக்கங்கள் நம் மீதும் நிச்சயம் படியும்.
அதனால்தான் நபியவர்கள் கூறினார்கள்:
‘மனிதன் தன்னுடைய நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, யாருடன் நட்பு கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொரு மனிதனும் கவனமாக இருக்க வேண்டும்.’
ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போமா? அந்த நேரத் தொழுகைக்கான (மக்ரிப் தொழுகை) அழைப்பொலி கேட்கிறது. அப்பொழுது உங்களைத் தேடி இரண்டு நண்பர்கள் வருகிறார்கள். ஒரு நண்பர் உங்களைத் திரைப்படம் பார்க்க அழைக்கிறார். இன்னொரு நண்பர் தொழுகைக்காக அழைக்கிறார். நீங்கள் யாருடைய அழைப்பை ஏற்றுக் கொள்வீர்கள்? உங்களின் உளரீதியான தொடர்பு யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர் பின்னால்தான் நீங்கள் செல்வீர்கள். இதைத்தான் அந்த நபிமொழி ‘மனிதன் தன்னுடைய நண்பனின் வழியிலேயே இருக்கிறான்’ என்கிறது.
நல்ல நண்பனின் தொடர்பால் விளையும் நன்மை என்ன? கெட்ட நண்பனின் சேர்க்கையால் விளையும் தீமை என்ன? நபியவர்களே இதனை ஓர் அழகான உவமை மூலம் விளக்கியிருக்கிறார்கள்:
‘நல்ல நண்பனின் உதாரணம் நறுமணப் பொருள் விற்பவன் போன்றதாகும். தீய நண்பனின் உதாரணம் அடுப்ப ஊதும் கொல்லனைப் போன்றதாகும். நறுமணப் பொருள் விற்பவனின் தோழமையால் உங்களுக்கு நிச்சயம் பயன்கள் கிட்டும். நீங்கள் நறுமணமப் பொருள்களை வாங்கிச் செல்லலாமம், அல்லது அந்த நறுமணப் பொருள்களின் இனிய மணமாவது உங்கள் மீது படும். கொல்லனின் அடுப்பு உங்கள் ஆடையை எரித்துவிடக்கூடும். அல்லது ஆடையில் நிச்சயம் கறை படிந்துவிடும்.’
நட்பிலேயே உயர்ந்த நட்பு எது தெரியுமா?
எந்தத் தன்னல நோக்கமின்றி, இறைவனுக்காகவே ஒருவர் யார் மீது அன்பு கொள்கிறாரோ, இறைவனுக்காகவே யார் நட்பு கொள்கிறார்களோ அப்படிபட்டவர்களின் தோழமைதான் மிகமிக உயர்ந்தது என்று இஸ்லாம் நமக்கு உணர்த்துகிறது.
நபிகள் நாயகம் அவர்கள் மறுமையின் காட்சி ஒன்றை பின்வறுமாறு வர்ணித்தார்கள்:
‘மறுமை நாளில் சிலர் தம்முடைய மண்ணறையிலிருந்து வெளிவருவார்கள். அவர்களின் முகம் ஒளியால் மின்னிக் கொண்டிருக்கும். முத்துகளால் உருவாக்கப்பட்ட மேடையில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள். மக்கள் அவர்களுடைய மகத்துவத்தைக் கண்டு ஏக்கம் கொள்வார்கள். அந்தச் சிலர் இறைத்தூதர்களோ, சத்தியத்துக்காக வீரமரணம் அடைந்தவர்களோ அல்லர்.’ தோழர் ஒருவர் ஆர்வத்துடன் நபியவர்களைப் பார்த்து, ‘ இறைத்தூதர் அவர்களே, அந்த உயர் சிறப்புக்குரியவர்கள் யார்’? என்று கேட்டார். நபியவர்கள், ‘எவர்கள் இறைவனுக்காக மட்டுமே ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினார்களோ அத்தகைய மக்கள்தாம் அவர்கள்’ என்றார்கள்.
இறைவனுக்காகவே ஒருவர் மீது அன்பு கொள்வது, இறைவனுக்காவே ஒருவரை நேசிப்பது என்பது நட்பின் உச்சகட்டமாகும். அதனால்தான் அந்த நட்புக்கு அவ்வளவு சிறப்பு கிடைக்கிறது.
சரி, ஏதோ ஒரு கட்டத்தில் நண்பனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டால் உடனே நாம் என்ன செய்கிறோம்? நம்மால் எந்த அளவு முடியுமோ அந்த அளவு அவனை வெறுக்கிறோம். வாயில் வந்தபடி யெல்லாம் பேசுகிறோம். அவனைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக் கொள்கிறோம். இத்தகைய செயலை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. உங்களுடைய விருப்பத்துக்கு மாறாக உங்களுடைய நண்பன் ஏதேனுனம் பேசிவிட்டாலும் நீங்கள் நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். கடுமையான சொற்களைப் பயன்படுத்தாதீர்கள். நண்பனை மன்னனியுங்கள். அவனுடைய போக்கிலேயே கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள். பிரச்னையை சிலநாள்கள் ஆறப் போடுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம் கேட்டார்கள்: ‘என்னுடைய அதிபதியே, மக்களில் உனக்குப் பிடித்தமானவர் யார்? அதற்கு இறைவன் பதிலளித்தான்: ‘பழிவாங்குவதற்கு வலிமையும் சக்தியும் இருந்தபோதிலும் எவர் மற்றவர்களை மன்னித்துவிடுகின்றாரோ அவர்தாம்.’
நண்பர்களுக்கும் நட்புக்கும் உரிய மதிப்பளிக்க வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் இனிய பண்பாகும்.

ஆக்கம்: பேராசிரியர் K. Thajudeen MA

 

 

Leave a comment

Your email address will not be published.


*