பணிப்பெண் கைதுண்டிப்பு: இந்தியன் சோசியல் ஃபாரம் விளக்கம்!

பணிப்பெண் கைதுண்டிப்பு: இந்தியன் சோசியல் ஃபாரம் விளக்கம்!

ரியாத்(13 அக். 15): சவூதியில் தமிழகப் பணிப்பெண் கைதுண்டிக்கப்பட்ட விவகாரத்தில், வீட்டு உரிமையாளரால் கைவெட்டப்பட்டதா அல்லது விபத்தா என்பது குறித்து தங்களுக்கு விவரம் எதுவும் தெரியாது என இந்தியன் சோசியல் ஃபாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்ற பணிப்பெண் கஸ்தூரி கை துண்டிக்கப்பட்ட கோர சம்பவத்தில் வீட்டு உரிமையாளரால் கைவெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக, அப்பெண் வீட்டு மாடியிலிருந்து ஜன்னல் வழியாக இறங்கும்போது தவறி விழுந்து கைதுண்டானதாக மற்றொரு செய்தி வெளியானது.

இந்நிலையில், இப்பெண்ணுக்கு நேரடியாக உதவிகள் செய்துவரும் இந்தியன் சோசியல் ஃபாரம் என்ற அமைப்பின் செயலாளர் நியூஸ் 7 தொலைகாட்சிக்கு அளித்தப் பேட்டியில், அப்பெண் ஜன்னல் வழியாக இறங்கும்போது யாரோ கையினைத் துண்டித்ததாகவும் தன் கையை வெட்டப்போவதாக வீட்டினுள் வீட்டு உரிமையாளர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டதால் அவர்களிடமிருந்து தப்பிக்கவே ஜன்னல் வழியாக துணி கட்டி இறங்கியதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக, சவூதி வீட்டுப்பணிப் பெண் கைதுண்டிப்பு: உண்மை என்ன! என்ற தலைப்பில் இந்நேரத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தற்போது, அப்பேட்டி குறித்து பொறியாளர் ரஷீத் கான் இந்நேரம்.காமுக்கு விளக்கமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

“தமிழகத்திலிருந்து சவூதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக வந்த கஸ்தூரி முனிரத்தினம் என்ற பெண்மணி கை துண்டிக்கப்பட்ட நிலையில் ரியாத்திலுள்ள ‘கிங்டம்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ‘இந்தியன் சோசியல் போரம்’, ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் பொதுச்செயலாளராகிய எனக்கு தகவல் கிடைத்ததும், மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட கஸ்தூரி அவர்களை சந்தித்து விபரங்களை கேட்டேன்.

அந்தப் பெண்மணி தன்னுடைய வீட்டு முதலாளியால் துன்புறுத்தப்பட்டதாகவும், அங்கிருந்து தப்பிப்பதற்காக ஜன்னலில் இருந்து துணியை கட்டி குதிக்கும் போது கை வெட்டப்பட்டதாகதாக உணர்ந்ததாகவும், உடனே மயக்க நிலையை அடைந்து விட்டதாகவும், விழித்து பார்க்கும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்து தன்னை காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார். உடனே அந்த விபரங்களை இந்திய தூதரக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று கஸ்தூரி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த இந்தியத் தூதரக முதல் செயலாளர் (Community Welfare) திரு. அனில் நாட்டியால், மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் மருத்துவமனை ஊழியர்களிடமும் விபரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

சவூதி அரசும் இந்த விசயத்தில் கவனம் எடுத்து தனிப்படை அமைத்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த விசயத்தில் கஸ்தூரி அவர்கள் முதலில் தெரிவித்த விபரங்களை வைத்தே ‘நியூஸ் 7’ தொலைக்கட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தேன்.

ஆனால் கஸ்தூரியின் வீட்டு முதலாளியின் மகன் இங்குள்ள ‘அரப் நியூஸ்’ போன்ற பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில், ‘கஸ்தூரி 70 வயதான என்னுடைய தாயாருக்கு பணிவிடை செய்வதற்காக 2 மதங்களுக்கு முன் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். சம்பவம் நடந்த அன்று என்னுடைய தாயார் தொழுகையில் இருந்த போது கஸ்தூரி தான் தங்கியிருந்த அறையின் உட்கதவை பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக துணியை கட்டி 3வது மாடியிலிருந்து குதிக்கும் போது தரைதளத்தில் இருந்த இரண்டு மின்சார பெட்டிகளுக்கிடையில் (Electricity Boxes) விழுந்ததில் வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த அந்த தெருவை சேர்ந்த ஒருவர் வீட்டின் காவலாளியிடம் தெரிவித்துள்ளார். உடனே என்னுடைய தாயார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஆம்புலன்சையும் வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்தார்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விசயத்தில் காவல்துறை உண்மையை கண்டறிந்து தக்க நடவடிக்கையை எடுக்கும் என நிச்சயமாக நம்புகிறோம். பாதிக்கப்பட்ட பெண் கஸ்தூரி அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை மட்டுமே இந்தியன் சோசியல் போரம் செய்துவருகிறது. மற்றபடி கை வெட்டப்பட்டதா அல்லது விபத்தில் முறிந்ததா என்று எந்த வித ஆதாரமும் இல்லாமல் உறுதிப்படுத்தி கூறவில்லை.”

மேற்கண்டவாறு இந்தியன் சோசியல் ஃபாரம், தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் பொதுச்செயலாளர் பொறியாளர் ரஷீத் கான் விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*