பிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்!

பிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்!

இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது.

மொட்டை வெயிலில் பீடங்களாக காய்ந்து கொண்டிருந்த அய்யனார்களும், கருப்பசாமிகளும், மாடசாமிகளும், அங்காள பரமேஸ்வரி, பேச்சியம்மன், இசக்கியம்மன், காளி, என்று உக்கிரமான நாட்டார் தெய்வங்கள் பெருந்தெய்வக்கோவில்களின் ஆகம விதிகளின்படி மாற்றியமைக்கப்படுகின்றன. கோவில் கோபுரங்கள், துணை தெய்வங்கள், உருவாக்கப்படுகின்றன. கோவில் மதில் சுவர்கள் கட்டப்படுகின்றன. சுற்றுப்பிரகாரங்கள் அமைத்து அதில் பெருந்தெய்வங்கள் குடியமர்த்தப்படுகின்றன.

நாட்டார் தெய்வங்களில் ஆண் தெய்வங்களை சிவனின் அவதாரங்கள் அல்லது ஏவல் கணங்கள் என்றும் பெண் தெய்வங்களை பார்வதி, லெட்சுமி, அம்சங்கள் என்றும் கற்பிக்கப்படுகின்றன. முன்பு ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பங்குனி உத்திரம், ஆடிக்கொடை, என்று திருவிழாக்கள் நடந்து கொண்டிருந்த நாட்டார் கோவில்களில் இப்போது அனுதினமும் விளக்கு ஏற்றப்பட்டு பூஜை, புனஸ்காரங்கள் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன.

முன்பு நினைத்தவுடன் குடும்பத்துடன் போய் குலதெய்வம் அல்லது நாட்டார் கோவில்களுக்குச் சென்று நேரடியாக கும்பிட்ட நிலைமை மாறி விட்டது. ஊருக்கு அருகில் இருக்கிற நாட்டார் கோவில்களில் ஒரு பிராமணர் அர்ச்சகராக இருக்கிறார். அவரே நாட்டார் தெய்வங்களுக்கும் ஏஜெண்டாக மாறி விட்டார். உண்டியல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நைவேத்தியம் படைக்கப்படுகின்றது. மஞ்சளும் குங்குமம் பூசி வெள்ளிக்கண் பதித்து உக்கிரமாகக் காட்சியளித்த நாட்டார் தெய்வங்கள் இப்போது சாந்தசொருபியாக உத்தரியம், பட்டு வேட்டி தரித்து அம்மாஞ்சியாக முழிக்கிறார்கள். முன்பிருந்ததை விட புரோகிதர் தொழிலுக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறது.

நிறைய பிராமண இளைஞர்கள் பஞ்சகச்சமும், மேல் உத்தரியமும் குடுமியும் வைத்துக் கொண்டு மொபெட்டுகளிலும், பைக்குகளிலும் சுற்றுகிறார்கள். முன் காலத்தில் போலவே பிராமணர்களை சாமி என்று அழைக்கும் குரல்கள் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிவராத்திரி, பங்குனி உத்திரம், அஷ்டமி, நவமி, பாட்டிமை, பிரதோஷம் நாட்களில் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. முகூர்த்த நாட்களில் மட்டும் தான் கூட்டம் கூட்டமாகக் கல்யாணங்கள் நடக்கின்றன. எல்லா விஷேச நாட்களிலும் புரோகிதர்கள் கிடைப்பது மிக மிக அரிதாகி விட்டது. ஃபீஸ் எவ்வளவு கொடுத்தாலும் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு இருபத்தியையாயிரம் வரை ஃபீஸ் வாங்கும் புரோகிதர்கள் பெருகி விட்டனர். இப்போது சமஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்வதில் எந்தத் தயக்கமுமில்லை.

அதே போல உணவு விஷயத்திலும் அசைவ உணவை கீழ்த்தரமானதாகவும் சைவ உணவை மேல்நிலையாக்கமாகவும் உருவாக்கி விட்டிருக்கிறது. அதில் அசைவ உணவிலும் மாட்டுக்கறி, பன்னிக்கறி சாப்பிடுபவர்கள் மிகக்கேவலமானவர்களாக அதாவது சாதியமைப்பில் கீழானவர்களாக கருதுகிற நிலைமை இன்றும் இருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைமுறையில் இருக்கிற வர்ணாசிரம அமைப்பும், மனுதர்ம சாத்திர விதிகளும் மக்களின் பொதுப்புத்தியில் ஆழமாக வேரோடியிருக்கிறது. எனவே தங்களுடைய உணவுப்பழக்கத்தைக் கூட வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலைமையை உருவாக்கி விட்டிருக்கிறது.

எனவே காலங்காலமாக மாட்டுக்கறி, பன்னிக்கறி சாப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்களே இப்போதெல்லாம் நாங்கள் மாட்டுக்கறி, பன்னிக்கறி, சாப்பிடுவதில்லை என்று சொல்வதும், இன்னும் உச்சமாக நாங்கள் சைவம் என்று சொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. கீழ்த்தட்டிலிருந்து பொருளாதாரரீதியாக மத்திய தரவர்க்கமாக மாறுகின்ற குடும்பங்களில் டான்ஸ் கற்றுக்கொள்வது, ஸ்போக்கன் இங்கிலிஷ், ஹிந்தி, சங்கீதம் யோகாசனம், கற்றுக்கொள்வது சாதாரண விஷயமாகி விட்டது. இப்போது யோகாசனத்தை இந்தியாவே கடைப்பிடிக்கிற உளவியல் நெருக்கடி வந்து விட்டது. பயிற்சி என்பது போய் இந்து மதத்தின் அடையாளமாக மாற்றப்பட்டு விட்டது.

மிக முக்கியமான திருநாட்கள் மட்டுமே கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த காலம் போய் இன்று காலண்டரில் போடப்பட்டிருக்கிற அத்தனை பிராமணிய, பஞ்சாங்க, விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. குளிகை, எமகண்டம், நல்ல நேரம், தோஷம், சூலம், பரிகாரம், என்று அனைத்து நாட்காட்டிகளும் நிரம்பி வழிகின்றன. நல்ல நேரம் குறிக்காமல் ராக்கெட்டோ, ஏவுகணையோ கூட ஏவப்படுவதில்லை. வீடுகளில் குடும்பத்தினரின் நலன் ஒன்றையே தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டு தன்னைத் தியாக தீபமாக கற்பித்துக் கொண்டு வாழ்கிற பெண்களை இந்த எல்லாச்சடங்குகளையும் முன்னெடுக்கிறார்கள். அவர்களே சுமங்கலி பூஜை, லட்சுமி பூஜை, விளக்கு பூஜை, ஐஸ்வரிய பூஜை என்று விதவிதமான பூஜைகள் மூலம் அணி திரள்கிறார்கள். நெற்றியில் மட்டும் இருந்த குங்குமம் இப்போது தலைமுடி வகிடு நெடுக பரவியிருக்கிறது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அனைத்து வெளியூர் கோவில் விழாக்களையும் பக்தி சிரத்தையுடன் எப்படி பெண்கதாநாயகி, பெண்வில்லன்களே நிறைந்த சீரியல்களைப் பார்க்கிறார்களோ அதே மாதிரி பார்த்து பரவசமடைகிறார்கள். கோவில்களுக்குச் செல்வதை தங்களுக்கான ஒரு புழங்குவெளியாக, ஒரு கொண்டாட்டமாக பார்க்கிற உளவியல் பெண்களிடம் இருக்கிறது. தொலைக்காட்சி மூலம் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அதன் மூலம் தாங்களும் தங்கள் குடும்பமும் மேல்நிலையாக்கத்தை அடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

மேல்நிலையாக்கம் என்பது முன்னேற்றம் என்று எடுத்துக் கொண்டால் சைக்கிள் வைத்திருக்கும் ஒருவர் மோட்டார்சைக்கிள் வாங்குவது கார் வாங்குவது என்று எடுத்துக் கொள்ளலாம். குடிசையில் இருப்பவர் வீடு கட்டி குடியேறுவது, இப்படி தங்களுடைய பௌதீகச்சூழலில் ஏற்படும் முன்னேற்றத்தையும் மேல்நிலையாக்கம் என்று சொல்லலாம். பௌதீகச்சூழலை மிக நவீனமான, விஞ்ஞான சாதனங்களை, பொருட்களை, வாங்கிக்கொள்வதன் மூலம் தங்களை மேல்நிலையாக்கம் செய்து கொள்கிறவர்கள் ஆன்மீகச்சூழலில் ஏன் மூவாயிரம் ஆண்டு பழமையான சநாதனமான, பிற்போக்குத்தனமான, சமத்துவமற்ற, சர்வாதிகாரமான,  வேதங்களையும், மனுதர்மத்தையும், வர்ணாசிரமக்கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்கிறார்கள்? பௌதீகச்சூழலில் நவீனத்தைத் தேர்ந்தெடுக்கிற பெரும்பாலான மக்கள் உளவியல்ரீதியாக மிகப் பிற்போக்கான பிராமணிய மேல்நிலையாக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களே ஏன்?

இந்திய சமூகத்தில் மிகச்சிறிய இடைவெளிக்குப் பின்பு மீண்டும் பிராமணியம் தன் ஆட்சியை விஸ்தரிக்கத் தொடங்கி விட்டது. அதற்குத் தேவையான நிரந்தர, தற்காலிக நடைமுறை உத்திகள் அதன் கருவிலேயே இருக்கின்றன. பிராமணியம் வேதகாலம் தொடங்கி தன்னை மாறி வரும் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொண்டேயிருக்கிறது. புத்தரை விஷ்ணு அவதாரமாக்கியது தொடங்கி இந்து மதத்தின் சீர்த்திருத்தவாதிகளான ராமனுஜர், வள்ளலார், பசவண்ணர், நாராயணகுரு, அய்யன் காளி, அய்யா வைகுண்டர், வரை இந்து மத எதிர்ப்பாளர்களான சார்வாகரை எரித்தும், அம்பேத்கரைச் சொந்தம் கொண்டாடியும், பெரியாரை எதிர்த்தும், இப்படி எல்லோரையும் விழுங்கி செரித்து அவர்களை வெறும் அடையாளங்களாக மாற்றியது வரை ஒரு நீண்ட நெடிய ஆக்கிரமிப்பு வரலாறு பிராமணியத்துக்கு இருக்கிறது.

மத்தியதரவர்க்கம் மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இந்த பிராமணியமயமாக்கலை தங்கள் வர்க்கத்தின், சமூகத்தின், சாதியின், மேல்நிலையாக்கம் என்று கருதுகின்றனர். கெடுவாய்ப்ப்பாக. பிராமணியமாக்கலையே இந்திய சமூகம் தன்னுடைய உச்சபட்ச உயர்ந்த நிலையாகக் கற்பிதம் செய்திருக்கிறது. வேதகாலசநாதனத்தைப் போலவே பகுத்தறிவுக்கும் வேதகால சார்வாகர் தொடங்கி ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. பகுத்தறிவு இயக்கம் அவ்வப்போது எழுச்சி பெற்றாலும் பதுங்கிப் பாயும் பிராமணியம் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
பிராமணிய மேல்நிலையாக்கத்தினால் நம் சமூகத்தின் தனித்துவமான பன்முகச்சூழல் அழிந்து ஒற்றைக் கலாச்சார சர்வாதிகாரம் உருவாகிறது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு இனக்குழுவின், உழைக்கும் மக்களின், கோவில்கள், முன்னோர் வழிபாடு, குலதெய்வங்கள், உணவுப்பழக்கம், இயற்கையோடு இயைந்த தனித்துவமான பண்பாட்டு அசைவுகள், ஆன்மீகவிழாக்கள், எல்லாம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பௌதீகச்சூழல் முன்னேற்றத்தினால் வாழ்க்கைத்தரத்தில் உயர்வு வரும். ஆனால் பிற்போக்கான இந்தப்பிராமணியமாக்கலினால் சமூகத்தின் வரலாற்றுச்சக்கரம் பின்னோக்கித் தள்ளப்படுகிற ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது.

எனவே பிராமணிய மேல்நிலையாக்கத்தின் ஆக்கிரமிப்பையும் நம்முடைய பண்பாட்டு அசைவுகளையும் பிரித்தறிய வேண்டியுள்ளது. வைதீக ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து உழைக்கும் மக்களின் எளிய ஆன்மிகத்திருவிழாக்களை மீட்டெடுத்து தங்கள் பண்பாடு குறித்த பெருமிதத்தை நிலை நாட்ட வேண்டியுள்ளது. இதற்கான பரப்புரையை தீவிரமாக நிகழ்த்த வேண்டியுள்ளது. இது தற்காலிக நடைமுறையுத்தி. நீண்ட கால யுத்தியாக அறிவியல் பூர்வமான பகுத்தறிவு இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. வரலாற்று அறிஞர் பேரா.கே.என்.பணிக்கர், பண்பாட்டில் தலையீடு செய்கிறோம் ஆனால் பண்பாட்டுத்தலையீடு செய்கிறோமா? என்ற ஆழமான கேள்வியைக் கேட்கிறார்.
ஆதிக்கம் செலுத்துகிற பண்பாட்டுநிகழ்ச்சி நிரலில் தொடர்ச்சியான தலையீடுகள் செய்வது, அதன் மூலம் வெகுமக்களிடம் ஒரு விமர்சன விழிப்புணர்வை உருவாக்குவது என்ற அளவில் பலகீனமாகவேனும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் எதிர் மேலாதிக்கமாக மாற்றுப் பண்பாட்டு நிகழ்ச்சி நிரலை நாம் உருவாக்கியிருக்கிறோமா? நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் இது தான். இதைத் தனியாக இடது சாரி பண்பாட்டு அமைப்புகள் மட்டும் செய்து விட முடியாது. மாற்றுப்பண்பாடு குறித்த ஒத்த கருத்துடைய அமைப்புகளின் மிகப் பெரிய அணி திரட்டல் தேவைப்படுகிறது. காலம் விடுக்கும் கோரிக்கை இது!

நன்றி: கரிசக்காடு

நன்றி: இந்நேரம்.காம்