பெண்ணை ஆண் எஸ்.ஐ இழுத்து செல்லும் காட்சி: பரபரப்பு வீடியோ!

பெண்ணை ஆண் எஸ்.ஐ இழுத்து செல்லும் காட்சி: பரபரப்பு வீடியோ!

கரூர் : காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் பெண் ஒருவரைத் தெரு வழியே இழுத்து செல்லும் காட்சி ஒன்று வாட்ஸ் அப் வழியாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கரூர் திருமாநிலையூரில் நேற்று முன் தினம் மாலை இரு வாலிபர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறி இரு தரப்பாரிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவலளித்தனர்.

அவசர நிலை அறிந்து விரைவாக வந்து சேரவேண்டிய காவல்துறையினர் மிகத் தாமதமாக சம்பவ இடம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் கடும் கோபமடைந்ததாக தெரிகிறது.

வாக்குவாதம் நீண்டுகொண்டிருந்த நிலையில், பசுபதிபாளையம் காவல்துறை துணை ஆய்வாளர் கோபால், தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார். இக்காட்சியினை அப்பகுதி மக்கள் தம் கைப்பேசியில் வீடியோ பதிவு செய்ததோடு, அதனை பத்திரிகையாளர்கள் உட்பட பலருக்கும் அனுப்பினர்.

இதனால் படுவேகமாக அந்த வீடியோ பலருக்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சனையைத் தீர்க்க வந்த காவல்துறையினரில் பெண் காவலர்கள் இருந்த நிலையில், ஒரு பெண்ணை ஆண் காவலர் வலுக்கட்டாயமாக தெரு வழி இழுத்துச் சென்றுள்ள இச்சம்பவத்தால் கடும் கோபமடைந்துள்ள மாதர் சங்கங்களும் பொதுமக்களும், சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சி.ஆனந்தகுமார்

Leave a comment

Your email address will not be published.


*