ஹேர்பின் விழுங்கிய 6 மாத குழந்தை: அரசு மருத்துவமனை சாதனை!

ஹேர்பின் விழுங்கிய 6 மாத குழந்தை: அரசு மருத்துவமனை சாதனை!

கரூர் : தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில், ஹேர்பின் தொண்டையில் சிக்கிய 6 மாத குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

கரூர் மாவட்டம், கீழ வெளியூர் அருகே உள்ள பிள்ளையார்கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி- லோகாம்பாள் தம்பதியருக்கு ரிஷிநாத் என்கிற 6 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரிஷிநாத் திடீரென அழுதுள்ளான். வழக்கம்போல் எதையாவது கேட்டு அழுகிறான் என நினைத்த பெற்றோர்,  முதலில் அலட்சியமாக  இருந்துள்ளனர். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்த நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே பதறியடித்துக்கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ஓடினர்.

ஆபத்தான நிலையில் பெற்றோர் பிள்ளையை தூக்கிக்கொண்டு  4 தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றபோதும், ஒவ்வொரு மருத்துவமனையும் சொல்லி வைத்தாற்போன்று,  “குழந்தை எதையோ விழுங்கி விட்டான். உடனடியாக திருச்சிக்குக் கொண்டு செல்லுங்கள்” எனக் கூறியுள்ளனர்.

அவ்வளவு தூரம் கொண்டு செல்லும் அளவுக்கு வசதியில்லாத அத்தம்பதியினர் இறுதியில் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குத் தம் குழந்தையைக் கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஜான் விஸ்வநாதன், குழந்தை எதையோ விழுங்கிவிட்டான் என்பதைப் பரிசோதனையில் புரிந்துகொண்டு, உடனே எக்ஸ்ரே எடுத்தபோது, குழந்தையின் தொண்டையிலுள்ள மூச்சுக்குழலில் ஹேர்பின் சிக்கி இருந்ததைக் கண்டறிந்தார்.

உடனடியாக தம் சக மருத்துவர்களான மலைதுரை மற்றும் வில்லியம் ஆண்ட்ரூஸ் ஆகியோரைத் துணைக்கழைத்துக் கொண்டு, குழந்தையின் தொண்டையில் சிக்கிய பின்னை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை ஆரம்பித்தார் மருத்துவர் விஸ்வநாதன். 10 நிமிடங்களில் சிகிச்சையை முடித்த அவர், வெற்றிகரமாக குழந்தையின் தொண்டையிலிருந்து ஹேர்பின்னை நீக்கம் செய்தார். ஒன்றரை இஞ்ச் நீளமும் ஒரு இஞ்ச் அகலமும் கொண்ட அந்த ஹேர்பின் நீக்கப்பட்டதோடு குழந்தை உயிர்பிழைத்தது. தற்போது குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பயந்து ஒதுங்கிய குழந்தையின் விசயத்தில் துணிச்சலுடன் உடனடியாக செயல்பட்டு வெற்றிகரமாக குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்மீது அப்பகுதி மக்களுக்கு அதிக நம்பிக்கையும் நன்மதிப்பும் ஏற்பட்டுள்ளதோடு அவர்களை வெகுவாக பாராட்டவும் செய்கின்றனர்.

குழந்தையை காப்பாற்றிய மருத்துவர் ஜான் விஸ்நாதனிடம் பேசியபோது, “குழந்தையை கொண்டுவந்ததும் ஒரு மருத்துவராக அந்த குழந்தைக்கு என்ன செய்ய முடியும் என யோசித்தேன். உரிய நேரத்தில் கடவுளை நம்பி சிகிச்சை உடனடியாக ஆரம்பித்தோம். இப்போது குழந்தை நல்ல முறையில் இருக்கிறான். அதுதான் எல்லோருக்கும் சந்தோஷம்” என்றார்.

தனியார் மருத்துவமனைகளை நம்பி பணத்தை வாரி இறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதையே மேற்கண்ட சம்பவம் தெளிவுபடுத்துகிறது.

– சி.ஆனந்தகுமார்

Leave a comment

Your email address will not be published.


*