அதிமுகவை பாஜகவில் சேர்க்கப் போகின்றாரா ஜெயலலிதா?!

அதிமுகவை பாஜகவில் சேர்க்கப் போகின்றாரா ஜெயலலிதா?!

அம்மாவின் அரசியல் வாழ்வு அந்திமக் காலத்தைத் தொட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

அம்மாவிற்கு பிறகு அதிமுக-வின் எதிர்காலம் என்னவாகும்?! இந்தியப் பிரதமர் கனவோடு இருந்த அம்மாவின் பழைய ஊழல் வழக்கை இறுக்கிப் பிடித்து, பின்னர் அதற்காக பல உடன்பாடுகளைப் போட்டுக்கொண்டு வெளியே வர வழிவிட்டது பாரதிய ஜனதா கட்சி. இன்று இந்தியா முழுவதும் பாஜக அதன் வேர்களை பரப்பி வருகின்றன. கஷ்மீர் முதல் கருநாடகம் வரை, குஜராத் முதல் மணிப்பூர் வரை இந்துத்வா சக்திகளின் அரசியல் செயல்பாடு ஊடுருவிக் கிடக்கின்றது. தமிழகம் (தமிழ்நாடு, கேரளா) ஆகிய இந்த மண்ணில் மட்டுந்தான் இந்துத்வா கும்பல்களால் அரசியல் செய்ய முடியவில்லை. அதற்கு பண்டைய காலந்தொட்டே தமிழர்களின் சகிப்புத் தன்மை, அறிவு முதிர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் போன்றவையும் அதனை சீரிய முறையில் வளர்த்தெடுத்த திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் ஆகியவையும் தான் எனலாம்.

இன்று இம்மியளவு கூட தமிழ்நாட்டுக்குள் பாஜக-வால் ஊடுருவ முடியாமல் இருக்கின்றது. ஒரு இரும்புக் கோட்டை என்றளவில் வலுவாக உள்ளது. இதனை சிறிய சிறிய துளைகளிட்டு உடைத்து நொறுக்கக் காத்திருக்கின்றது இந்துத்வா மற்றும் வட இந்திய ஏகாதிபத்தியம். தமிழ்நாட்டுக்குள் வட இந்திய ஏகாதிபத்தியம் தளம் அமைத்துவிட்டால் இந்தி எதிர்ப்பு என்பது உடைந்து போகும், இந்தி மொழி நாடு முழுவதும் திணிக்கப்படும். அடுத்து மாநிலங்களின் தனிப்பட்ட மொழி, பண்பாட்டு அடையாளங்கள் தூக்கி எறியப்படும். சினிமா, பத்திரிக்கை என்பவைகளில் தாய்மொழிகள் நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் என மாறும். அடுத்து பார்ப்பன ஜாதியத்தை வளர்க்க முடியும். இந்தியாவின் சில பாகங்களில் மட்டுமே பார்ப்பனியத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். பிகார், மராத்வாடா, விதர்பா, தண்டகாரண்யம், தமிழகம், கேரளம் போன்ற பகுதிகளில். ஆக இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கிவிட்டு பார்ப்பன ஏகாதிபத்தியம், சமஸ்கிருத மயம், இந்துத்வ பரவலாக்கம் ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதே இன்றைய பாரதிய ஜனதா கட்சி, இந்து மக்கள் கட்சி, ராஷ்ட்ரிய சுயம் சேவக் உட்பட வலதுசாரிகளின் அடிப்பை எண்ணமே. ஐஐடியில் பெரியாரை அழிக்க நினைத்ததும் அவ்வாறான ஒரு நகர்வே.

தமிழகத்தில் தனியாக பாஜகவால் ஒன்றையும் பிடுங்க முடியவில்லை. அதனால் அதிமுக என்ற பெருமரத்தை மலைப்பாம்பு போல விழுங்கிவிட காத்திருக்கின்றது. இதனால் ஜெயலலிதாவோடு பல பேரங்கள் நடைபெற்றுள்ளன. ஜெயலலிதாவை தேசிய அரசியலுக்குக் கொண்டு போவது, அதன் பின் தமிழக தலைமையை ரஜினிகாந்திடம் கொடுப்பது, அதிமுக-வை பாஜகவோடு இணைப்பது இது தான் இவர்களின் திட்டம். இதன் மூலம் திராவிட அரசியல் விதையாகி இரட்டை இலை என்ற சாம்ராஜ்யாத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் கட்சியை பாஜக விழுங்க காத்திருக்கின்றது. இதற்காக அதிமுக-வில் பலமாக இருந்து வருகின்ற தேவர் சாதியினரோடு பெரும் பேரம் ஒன்று நிகழ்ந்து வருகின்றது. அவர்களை பாஜகவில் இணைக்க தமிழிசை போன்றோர் முயன்று வருகின்றனர். அது மட்டுமின்றி தென் மாநிலங்களில் இந்து நாடார்களை கிறித்தவ நாடார்களுக்கு எதிராக திருப்பி, அவர்களையும் பாஜகவில் இணைக்க நினைக்கின்றனர். விரைவில் பாஜக காமராசர், முத்துராமலிங்கர் புகழ் பாடும் பாருங்கள். அது மட்டுமின்றி விஜயகாந்தையும் பாஜகவோடு இணைத்து தமிழக முதல்வர் பதவி தருவதாக வாக்களிப்பார்கள். இதன் மூலம் தென் தமிழகத்தின் மூன்று பெரும் வாக்கு வங்கியை விழுங்கலாம் என்ற திட்டம் உண்டு அவர்களிடம். இவ்வாறு நிகழும் பட்சத்தில் பாஜக தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும். அவ்வாறான சூழலில் வட தமிழகத்தின் வன்னியர் கட்சியான பாமக-வோடு பேரம் நடைபெறும் பிரிவினைக்கு ஆதரவு தாருங்கள் என்பார்கள். தமிழகம் இரண்டாகப் பிரிந்த பின்னர் தென் தமிழகம் பாஜகவின் கோட்டையாகும், வட தமிழகத்தில் பாஜக இரு பெரும் கட்சிகளில் ஒன்றாகும். வட தமிழகத்தில் ரஜினி காந்தின் தலைமையில் பார்ப்பனர்களது கொள்ளை தொடரும். இந்துத்வா விஷம் ஏற்றப்படும். தென் தமிழகத்தில் விஜயகாந்த் போன்றோரது தலைமையில் ஜாதிக் கலவரக் காடாக மாற்றப்பட்ட்டு அங்கு கணிசமாக இருக்கின்ற முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்கள் மீதான வன்முறை தொடரும். அங்கிருந்து பாஜகவின் அரசியல் வியூகம் கேரளாவிற்கு நகரும்.

இதைச் செய்து முடிக்க எச். ராஜா, இல.கணேசன், தமிழிசை, ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆர்.எஸ்.எஸின் திட்டத்தோடு விஜயகாந்த், ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆகியோரோடு தொடர்ந்து அரசியல் நகர்த்தல் செய்து வருகின்றது. 2ஜி ஊழல் என தொடர்ந்து திமுக-வை மக்கள் மனதில் வெறுப்பை உண்டாக்க தமிழகத்தில் பார்ப்பனிய ஆதரவு ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றன. சமூக ஊடகங்களில் இதைப் பரப்ப ஒரு பெரும் நிறுவனமே இயங்கி வருகின்றது. இலவு காத்த கிளியாக திமுக திராணியற்று நிற்கின்றது.

இதற்காக பெரியாரது கொள்கையை தமிழகத்தில் இருந்து விரட்ட அனைத்து நிலைகளிலும் அது இயங்கி வருகின்றது. சமூக ஊடகங்களில் தொடர்ந்து பெரியாரை இகழ்ந்து எழுதவும், கேலி செய்யவும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்ற பல இளைஞர்களை முடுக்கிவிட்டுள்ளது. அத்தோடு பத்திரிக்கை, டிவி போன்றவைகளும் இதை ஆற்றி வருகின்றன. தமிழகம் போலவே இந்தியா முழுவதும் உள்கட்டமைப்பு பிரச்சனை, வளர்ச்சியின்மை பொருளாதார சிக்கல், ஊழல்கள் நிலவுகின்றன. ஆனால் தமிழகத்தில் இவை எல்லாம் நிகழ திராவிடக் கட்சிகளே காரணம், அவர்கள் இல்லை என்றால் வளர்ச்சி கண்டிருப்போம் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் திராவிடக் கட்சிகள் ஆளாத ஏனைய இந்திய மாநிலங்கள் என்ன மலேசியா, சிங்கப்பூர், துபாய் மாதிரியா இருக்கு?! சொல்லப் போனால் அவற்றை விட சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டில் சரி சம அளவில் தமிழகம் முன்னேறியுள்ளது என்பதை பொது மக்கள் உணரவில்லை.

தமிழகத்தில் இந்துத்வாதத்தை வளர்க்க இவர்கள் எடுத்துள்ள ஆயுதம் தமிழ் மொழி பாசம். தமிழை தேசிய மொழி ஆக்குங்கள் என்ற கோரிக்கையை நாடாளமன்றத்தில் நிராகரித்த இவர்கள் இன்று திருவள்ளுவர் விழா, தமிழ் விழா எல்லாம் நடத்துகின்றனர். சந்து சாக்கில் சமஸ்கிருதம் உயர்ந்தது அதையும் படியுங்கள் என நச்சைக் கலக்கின்றனர். தமிழுணர்வை வைத்து அரசியல் செய்ய இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, புலிகளில் இருந்து உதிர்ந்த சில கட்சிகளை கைக்குள் போட்டு ஈழத்தமிழர் அபிமானம் காட்டுகின்றது பாஜக. எல்லாம் நீலிக் கண்ணீர் மட்டுமே.

கருணாநிதி ஈழப் பிரச்சனையில் ஒன்றும் செய்யவில்லை என ஒன்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். ஒரு மாநில முதல்வராக என்ன செய்ய முடியும் என்பதை உணர்வதில்லை. தாம் ஜெயிச்சால் இந்திய ராணுவத்தை அனுப்புவேன் எனக் கூறிய ஜெயயலலிதா என்ன செய்தார் எல்லாம் காற்றில் எழுதிய வாக்குறுதிகள் தானே. கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சர் தானே, அவர் என்ன செய்தார் மாணவர் போராட்டம் நிகழ வழிவிட்டார், இந்தியாவிற்கு அழுத்தும் கொடுத்து ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக ஓட்டுப் போடுவதை தவிர்த்தார். அவ்வளவு தான் செய்ய முடியும். தனிநாடே வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லாம் ஓவருக்கு ஓவர்?!

ஆனால் அவை முடிந்த கதை. இன்று தமிழகம் என்ற மாணிக்கத்தை விழுங்க ஆதிசேச நாகமாக படமாடிக் கொண்டிருக்கின்றது ஆர்.எஸ்.எஸ் பாஜக பரிவாரங்களும் அவர்களுக்கு அம்மணமாக விசிலடிச்சான் குஞ்சுகளாக ஆடிக் கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டு சாதிக் கட்சிகளும், நாம் தமிழர் போன்ற இனவாதக் கட்சிகளும்.

நன்றி:  இக்பால் செல்வன்

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*