டெல்லி சட்ட அமைச்சர் கைது பின்னணியில் மத்திய அரசு?

டெல்லி சட்ட அமைச்சர் கைது பின்னணியில் மத்திய அரசு?

டெல்லி சட்ட அமைச்சர் கைது பின்னணியில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலி கல்விச் சான்றிதழ் பெற்றதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வந்த, அம்மாநில சட்ட அமைச்சர் ஜிதேந்தர்சிங் தோமர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைதானவுடன் தனது அமைச்சர் பதவியை தோமர் ராஜினாமா செய்தார்.

தோமர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவரது இல்லத்துக்கு 20-க்கும் மேற்பட்ட போலீஸார் அனுப்பப்பட்டனர். போலீஸ் படையுடன் சென்று தோமரை கைது செய்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் அவர் மீதான கைது நடவடிக்கைக்கு விளக்கமளித்துள்ள டெல்லி போலீஸ் தனது தற்காப்புக்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை மேற்கோள் காட்டியுள்ளது.

இது குறித்து டெல்லி போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் ஆட்கொணர்வு மனுவின் விதிமுறைகளின்படி கிரிமினல் வழக்குகளில் அதுவும் மோசடி தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு குறிப்பிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “தோமருக்கு எதிராக கடந்த மே 11-ம் தேதியன்று பார் கவுன்சில் செயலாளரிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்தது. அதன் பின்னர் 26 நாட்கள் அந்த புகார் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

இருப்பினும், போலீஸ் உயர் அதிகாரி என்னதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மேற்கோள் காட்டினாலும், அதையும் தாண்டி போலீஸ் நடவடிக்கையில் வேறு ஒரு பெரிய அளவிலான தலையீடு இருந்தது தெரிகிறது.

தோமர் மீதான புகாரை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்காக பதிவு செய்ததன் பின்னணியில் டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள், மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோரின் தலையீடு இருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தி இந்துவுக்கு கிடைத்த தகவலின்படி, தோமர் மீதான வழக்கு விசாரணை குறித்து ஒவ்வொரு சிறு முன்னேற்றமும் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அண்மையில் டெல்லி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து தோமர் வழக்கில் வேகம் காட்டப்பட்டுள்ளது எனத் தெரிகிறது

Leave a comment

Your email address will not be published.


*