ஆங் சான் சூகியின் மன்னிக்க முடியா மெளனம்!

ஆங் சான் சூகியின் மன்னிக்க முடியா மெளனம்!

இரு விழிகளும் இல்லாதவர்கள் கண்ணாயிரம் என்று பெயர் வைப்பதை போல் அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களில் பலர் உண்மையிலேயே அதற்கு தகுதியானவர்களா என்று தொடரும் சர்ச்சையில் ஆங் சான் சூ கீயுயை சுற்றியும் சர்ச்சைகள் தொடர்கின்றன.

24 ஆண்டுகளுக்கு முன் மியான்மரின் ஆங் சான் சூகீக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட போது “ஜனநாயகம், மனித உரிமைகள், வெவ்வேறு இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு ஏற்படுத்துதல்” போன்றவைகளுக்கு ஆங் சான் சூயின் பங்களிப்புக்காக வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. மேலும், அடக்குமுறைகளுக்காக எதிரான குறியீடு என்றும் நோபல் குழு அவரை வர்ணித்தது.

ஆனால் 5 நபர்கள் கொண்ட நோபல் குழுவின் இக்கூற்றை மியான்மரின் ரோஹிங்யா முஸ்லீம்களால் ஏற்று கொள்ள முடியும் என தோன்றவில்லை. இரு வருடங்களாக பர்மிய முஸ்லீம்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக ஆங் சான் சூகி தொடர் மெளனம் சாதித்து வருகின்றார். சர்வதேச செய்தியாளர்கள் தொடர்ந்து இது குறித்து வினவும் போது மணிரத்னம் மும்பையின் இனப்படுகொலையை இரு பிரிவினருக்கு இடையேயான மோதல் என சித்தரித்ததை போன்று பவுத்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு இனப்படுகொலையை தெருச்சண்டையை போல் பாவித்து கருத்து தெரிவித்தவர் ஆங் சான் சூகி என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு, அரசின் எத்திட்டங்களும் சென்றடையாமை, குழந்தை பெற்று கொள்ளுவதில் கட்டுப்பாடு, மதத்தை பின்பற்றும் உரிமை மறுக்கப்படல் என ஆரம்பித்து முஸ்லீம்களின் மிச்சமுள்ள சொத்துக்களும் சூறையாடல், அபலைகளின் உயிரும் கற்பும் சூறையாடப்படுவது வரை ரோஹிங்யா முஸ்லீம்களின் மீது அரசின் முழு ஆதரவுடன் வன்முறை வெறியாட்டம் நடைபெறுகிறது.

குஜராத் மாடலை போல் இரு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கலவரத்தில் ரோஹிங்யா முஸ்லீம்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களை நோக்கியும் கள்ளத்தோணியில் வேறு நாடுகளுக்கு செல்லவும் தலைப்பட்டனர். அப்படி சென்றவர்கள் தான் சமீபத்தில் இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் மலேஷியா உள்ளிட்ட எந்நாட்டாலும் ஏற்று கொள்ள முடியாமல் தத்தளித்தனர் என்பது நாம் அறிந்ததே. ஓர் இனத்தையே பூண்டோடு அழிக்க நினைக்கும் அரசின் கடைசி நடவடிக்கையாக சென்ற ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் கூட இனம் என்பதில் ரோஹிங்யா என்று பதிவு செய்யாமல் வலுக்கட்டாயமாக பெங்காலி என்றே அரசு அதிகாரிகள் பதிவு செய்தனர்..

இவ்வளவுக்கு பிறகும் ஏன் ஆங் சான் சூகீ மவுனம் காக்கிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. முஸ்லீம்கள் மேல் நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தால் 2016ல் தாம் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் பவுத்தர்கள் ஆதரவு தர மாட்டர்கள் எனும் அச்சமே அதற்கான காரணம் எனில் ஒரு இனத்தின் அழிவை ரசிக்கும் அளவுக்கு ஒரு சமூகம் கீழிறங்கி சென்ற அவல நிலையை தான் இச்சூழல் உணர்த்துகிறது.

பெரும்பாலும் அமைதிக்கான நோபல் பரிசுகள் இவ்வாறு தான் இருந்திருக்கின்றன. 1994ல் அமைதிக்கான நோபல் பரிசு இஸ்ரேலின் இட்சாக் ராபினுக்கு வழங்கப்பட்டதை குறித்து காஸாவின் மழலைகளிடம் 2009ல் பாராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு குறித்தும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகளிடமும் கேட்டால் தெரியும் அப்பரிசின் பெறுமானம்.

21 ஆண்டுகள் சிறையில் இருந்து வெளி வந்த உடன் “உலகின் எம்மூலையிலும் யாரும் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வசிக்கும் அளவு திறந்த சரணாலயமாக மாற்றுவேன்” என்று நோபல் பரிசு வாங்கும் போது சூளுரைத்தார் ஆங் சான் சூ கீ. நீங்கள் முதலில் உங்கள் நாட்டிலிருந்து அதை தொடங்குங்கள், இல்லையெனில் நோபல் பரிசை திரும்ப கொடுங்கள். இரண்டையுமே செய்யவில்லையெனில் இனி அமைதிக்கான நோபல் பரிசை நெதன்யாகுக்களுக்கும், ராஜபக்சேகளுக்கும், நரேந்திர மோடிகளுக்கும், சிசிக்களுக்கும் இப்போதே அறிவித்து விடலாம்.

ஃபெரோஸ்கான்

நன்றி:இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*