உண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்

உண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்

15/04/2015 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியுடனான டீஸ்தா சேதல்வாட்டின் பேட்டியை குறித்த ஒரு அலசல் கட்டுரை.  உண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்!

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், வி.ஹெச்.பி… வகையறாக்களுக்கு, கேட்டதும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பெயர் டீஸ்தா. காரணம், குஜராத் கொடுமைகளுக்கு எதிராக ஓயாமல் போராடும் இவர், ஒரு குஜராத்தி இந்து!

குஜராத் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக தொடர்ந்து பல வழக்குகளை போட்டு நடத்தி வருபவர், அவற்றில் பலவற்றில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளார். கலவரத்திற்கும் பின் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் கூட நுழைய இவருக்கு ஆட்சியர்கள் தடை விதித்தனர்.  குஜராத் கலவரத்தின் காரண கர்த்தாக்கள் இன்னும் சுதந்திரமாக உலவும் நிலையில் இவர்களை போன்றவர்கள் தொடுக்கும் நீதி போராட்டம் அந்த கயவர்களை கதி கலங்க வைக்கிறது. அதன் பலன் இவர் மீது பல பொய் வழக்குகள், எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலை.

டீஸ்தாவின் பேட்டியில் நமக்கான பாடங்களும், இத்தகைய பிரச்சனைகள் குறித்த இன்னொரு கண்ணோட்டத்தையும் காணலாம்.

மும்பையில் ‘டெய்லி’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘பிசினஸ் இந்தியா’ ஆகியவற்றில் நிருபராக தனது பணியை துவக்கிய டீஸ்தா மதவாதம், தலித் – ஆதிவாசிகளின் உரிமைகள், அடிப்படைப் போராட்டங்கள்… எதைப் பற்றியும் எழுத, வெகுஜனப் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ போதுமான இடமோ, அக்கறையோ இல்லை என்கிறார். இதன் காரணமாக 1993ல் பாபர் மசூதி இடிப்புக்கு பின் பெரிய பத்திரிக்கையிலிருந்து வெளியேறினார்.

வெகுஜனப் பத்திரிக்கைகள், ஊடகங்கள் இத்தகைய விஷயங்களை எந்த அளவு புறம் தள்ளுகின்றன என்பதை இது காட்டுகிறது. “News Value” அற்ற விஷயங்களாகவே பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசுவதையும் கலவரத்திற்கு பிந்தைய சூழல்களையும் அவர்கள் கருதுகின்றனர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கான ஒரு மாற்று மீடியாவிற்கான முன்னேடுப்புகள் அதிகம் எடுக்கப்படும் இத்தகைய சூழலில் இந்த போக்கு அதன் அவசியத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

தான் இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் வழக்குகளை நடத்துவதற்கு காரணம் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அயராமல் சாட்சி சொல்லும் குஜாரத் ஏழை முஸ்லிம் பெண்கள் தான் என்று டீஸ்தா சொல்வது சிலிர்க்க வைக்கிறது. காரணம் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் அம்மக்கள் இன்றும் நீதி போராட்டத்தில் சளைக்காமல் இருப்பது வியப்படைய வைக்கிறது.

மதவாதத்திற்கு எதிரான போரட்டத்தில் அவர் சொல்லும் ஒரு கருத்து முக்கியமானது. இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமும் அதை வலியுறுத்துவதே.  எல்லோராலும் சட்டப்போராட்டம் சாத்தியமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் டீஸ்தா வன்முறை, பாலியல் குற்றங்கள், கொலை இவற்றுக்கு எல்லாம் தண்டனைக்காகத்தான் சட்டத்தின் முன் போராடுகிறோம். ஆனால், சமூகத்தில் மதவாதம் பெருகாமல் இருக்க, வேறு தளத்தில் போராட வேண்டும்.”

”அது என்ன?”

”முதலில் மதவாத வன்முறை நடந்த பின்னர்தான் நாம் எதிர்வினை செய்கிறோம். ஆனால், அதற்கு அவர்கள் பல காலமாக ஆயத்த வேலைகள் செய்து வெறியேற்ற மனதைத் தயாரிக்கிறார்கள். அதை அடையாளம் கண்டு முதலிலேயே நாம் எதிர்க்கவேண்டும்.”

”எப்படி?”

”பாடப் புத்தகங்களில் தொடங்கி பல இடங்களில் வரலாற்றைத் திரித்துச் சொல்கிறார்கள்.

வீர சிவாஜியை எடுத்துக்கொள்ளுங்கள். அவர், ஒளரங்கசீப்புடன் மதரீதியாகப் போராடவே இல்லை; நில வரி, இதர பிரச்னைகளுக்காகவே போராடினார். சிவாஜியின் அணியில் பல முஸ்லிம்கள் இருந்தார்கள். அவர் இந்துமத வெறியர் அல்ல. ஆனால், அவரை அப்படிச் சித்திரித்து தங்களுக்குச் சாதகமாக்கிவிட்டார்கள்.

அதேபோல காந்தியை ஏன் கோட்சே கொலை செய்தான்? பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு பல கோடி ரூபாய் தரவேண்டும் என அவர் சொன்னதால், கோபத்தில் கோட்சே அப்படிச் செய்தான் என்கிறார்கள். ஆனால், காந்தியைக் கொல்ல அதற்கும் 15 வருடங்களுக்கு முன்பு இருந்தே, ஐந்து முறை முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதில் இரண்டில் கோட்சேவும் சம்பந்தப்பட்டிருக்கிறான். காந்தி, இந்திய சமூகத்தில் எல்லா மதங்களும் சாதிகளும் சமமாக இணக்கத்துடன் வாழவேண்டும் என ஆழமாக விரும்பிய, போதித்த ஓர் இந்து. அதற்காகவே அவரைக் கொன்றார்கள். இப்படி உண்மை வரலாற்றை நாம் முன்வைக்க வேண்டும்.

நிச்சயம் மதவாதத்திற்க்கு எதிரான நமது போராட்டம் இத்தகையதாக அமைய வேண்டும். கலவரங்கள் பல காலமாக திட்டமிட்டு செய்யப்படுகின்றன அப்படியிருக்க அதற்கான எதிர்வினையை அவர்கள் எதிர்ப்பார்த்தே செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் எதிர்வினையை செய்து அவர்களை நாம் சிறிது வெற்றியடைய செய்கிறோம் என்பதே உண்மை. “Innocence of Muslims” போன்ற திரைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவும் சில வதந்திகள் போன்றவையும், எதிர்வினைகளை எதிர்பார்த்து செய்யப்படுபவையே, நம்மை நடுநிலையாளர்கள் கண்களுக்கு கூட சகிப்புத் தன்மையற்றவர்களாக ,முரடர்களாக காட்ட முயற்சிக்கும் ஒரு யுக்தியே.

இத்தகைய விஷயங்களை எதிர்க்கொள்ள ஒரு சிறந்த உதாரணத்தை சமீபத்தில் பிரான்ஸ் மக்கள் நிகழ்த்தி காட்டினார்கள். நபிகள் நாயகம் பற்றிய ஒரு கேலிச் சித்திரத்துக்கு  எதிராக #Who Is Muhammad என்ற பதத்துடன் டிவீட் செய்ய ஆரம்பித்தார்கள். விளைவு பலரையும் நபிகள் நாயகத்தை பற்றி தெரிந்து கொள்ள வைத்ததுடன் இஸ்லாத்தின் பாலும் அது ஈர்த்தது. இத்தகைய அறிவு சார் எதிர்வினைகளே தற்போது தேவை.

வரலாற்று திருப்பு குறித்து ஏற்கனவே நான் எழுதிய  வரலாற்றை திரிக்கும் பாஜக என்ற கட்டுரை இத்தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது மோடி அரசாங்கத்தில் பாடப்புத்தகத்தில் வரலாறுகள் திரிக்கும் வேலை படு வேகமாக நடைபெறுகிறது. இதை தடுக்கும் வேலைகளில் இறங்கவேண்டும். முடியாத பட்சத்தில் உண்மையான வரலாறை மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

பன்முக கலாச்சாரம் கொண்டது இந்திய, அதை ஆரிய காலாச்சார நாடாக மற்றும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பாதிப்பட்டவனின் கடைசி நம்பிக்கை நீதித்துறை. அப்படிப்பட்ட நீதித்துறையில் நம்பிக்கை கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் டீஸ்தாவுக்கு நன்றிகள் பல. அறிவு சார் சமுதாயமாக செயல்படுவோம். அந்த பேட்டியின் கடைசி பத்தியை கொண்டே எனது கட்டுரையையும் முடித்துக் கொள்கிறேன்

‘டீஸ்தா’ என்பது ஓர் ஆற்றின் பெயர். இமயத்தில் உருவாகி சிக்கிம் வழியே வங்கதேசம் வரை ஓடும் இந்தியாவின் ஓர் ஆற்றின் பெயர். டீஸ்தா என்றால், வேட்கையைத் தணிக்கும் தண்ணீர் எனப் பொருள். நம் சமூகத்தில் நீதிக்கான வேட்கையுடன் அலையும் மனிதர்களுடன் சேர்ந்து, தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறார் டீஸ்தா. அந்தக் கறுப்பு நாட்களில் ஓடிய ரத்த ஆறுகளைச் சுத்தப்படுத்தும் புதுவெள்ளமாக!

அப்துல் ரஹ்மான் இப்னு ஹனிபா

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*