மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக்கும் இந்தியா: இயக்குநர் ரஞ்சித் காட்டம்!

மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக்கும் இந்தியா: இயக்குநர் ரஞ்சித் காட்டம்!

மதுரை(30 டிச 2016): மாட்டை தெய்வமாக்கி, மனிதனை அடிமையாக்கும் நாடு இந்தியா என்று கபாலி பட இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கில் கலந்துகொண்ட இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது;

இந்தியா மனிதனை மனிதனாக பார்க்காத நாடு. இங்கு சமூக நீதியை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்.? அரசாங்கம் தானே நம்மை இழிவான வேலையை செய்ய சொல்கிறது. இந்த வருடத்தில் மட்டும் 26 பேர் பாதாள சாக்கடையில் இறங்கி, இறந்து போயிருக்கிறார்கள். அதில் எத்தனை இளைஞர்கள் அவர்களின் கனவுகள் அழிந்து போனது.

இந்த விஷயத்தில் ஊடகங்கள் கூட மவுனம் சாதிக்கிறது. மனிதக்கழிவை அகற்றுவோர்க்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டத்தை அரசே அமல்படுத்த மறுக்கிறது. இதைப்பற்றி நாம்தான் பேசுகிறோம். வேறு யாராவது பேசுகிறார்களா?

உணவுக்காகத்தானே இந்த வேலையை செய்கிறோம். இந்த வேலையை செய்ய மாட்டோமென்று எல்லோரும் ஒருநாள் இருந்து பாருங்கள். அப்போதுதான் இதுக்கு முடிவு வரும். ஒரு கல்யாணம், திருவிழா என்றால் சாதியாக ஒன்றாக சேருகிறீர்கள்.
ஆனால் இந்த இழிவான வேலையை செய்ய மாட்டோமென்று சொல்ல ஏன் ஒன்றாக திரள மறுக்கிறீர்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே அறிவற்றவர்களாக அடிமைகளாக இருக்க போகிறீர்கள். இங்கு நீதியை எதிர்பார்க்காதீர்கள். இந்த நாடு மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக நினைக்கும் நாடு. இங்கு நீதி கிடைக்காது.

நாம் சுய உணர்வுள்ளவர்களாக மாற வேண்டும். நீங்க இந்த வேலையை மறுக்க ஏன் அஞ்சுகிறீர்கள், அடிப்பார்கள் என்றா? அடித்தாலும் பரவாயில்லை. அடி வாங்குங்கள் ஆனால், இந்த வேலையை மட்டும் செய்யாதீர்கள். நம்முடைய கனவுகளை லட்சியங்களை அடைய இடையிலுள்ள தடை கற்களை உடைக்க வேண்டும் என்று அம்பேத்கார் சொன்னார். ஒவ்வொரு முறையும் நம்மை காப்பாற்ற இயேசு வருவார், அம்பேத்கார் வருவார் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம் பசிக்கு எப்படி நாம் உணவு சாப்பிடுகிறோமோ, அதுபோல் நம்மீதான இழிவுகளை களைய நாம்தான் முடிவெடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த வேலையை விட்டு செல்ல வேண்டாம். இவை இன்றோடு போகட்டும். மகிழ்ச்சி”.

இவ்வாறு ரஞ்சித் பேசினார்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*