காந்தியமா? கோட்சேயிசமா? – காலித் அல் மயீனா!

காந்தியமா? கோட்சேயிசமா? – காலித் அல் மயீனா!

ந்தியா தன் அண்மைக்கால நிகழ்வுகளால் உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வழமையான  வேடிக்கைகளினூடே நாட்டில் மற்றுமோர் அபத்தம் அரசியலில் பூதாகரமாகிறது. மாட்டிறைச்சி தான் அது. நாறும் அதன் வாடை இந்தியாவின் அரசியல் அரங்குகளில் வீசிக் கொண்டிருப்பது தான் தற்போதைய பரபரப்புச் செய்தி.

நீண்ட காலமாகவே மாட்டிறைச்சியை அரசியலில் சமைத்துவந்த போதிலும் அண்மையில் ஏழை முஸ்லிம் ஒருவர் மதவெறிக் கும்பல்களால் தாக்கிக் கொல்லப்பட்ட போதுதான், கெட்டுப்போன மாட்டிறைச்சியின் வாடையைத் தன்பிம்பமாக இந்தியா உலகிற்குக் காட்டியது. ஹிந்துக்களின் உயர்பிரிவினரால் புனிதமாகக் கருதப்படும் பசுவை உணவின் பொருட்டு கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணையின்றி  மதவெறிக் கும்பல் ஒன்றால் அந்த முஸ்லிம் கொல்லப்பட்டார். பித்துப் பிடித்த கும்பல் ஒன்று சேர்கையில் அங்கே விட்டுவிடுதல் என்பது இல்லாமல் போகிறது.

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி காத்த மெளனம் தான் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தாற்போலாயிற்று. (இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை வெளியீட்டுக்குப் போகிற இச்சமயத்தில் ‘ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்’ என்று பீஹார் தேர்தல் களத்தில் திருவாளர் திருவாய்மலர்ந்திருக்கிறார். அதுகூட நேர்மையற்ற ஒன்றே). அரசியலில் மோடியின் பெயர் என்பது குஜராத் இனக்கலவரத்தையே  நினைவுபடுத்துவதாக உள்ளது.

இந்தியாவின் உற்ற நண்பனாக, அதன் அரசியலை உற்று நோக்குபவனான எனக்கு  மோடியின் தந்திர மெளனமோ, இந்தியர்கள் இருகூறு மனநிலையோ – எனக்கு எவ்வித வியப்பையும் அளிக்கவில்லை. இந்தியர்களில் ஒருசாரார்  தங்களது நாட்டை உலகின் முன்னேறிய 10நாடுகளுள் ஒன்றாகக் காண விழைகையில் மற்றொரு சாராரோ தங்களது வெறிச்செயல்களால் பின்னோக்கி இழுத்து இழிவு செய்கிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இனவாதமும் வகுப்புவெறியும் இந்தியாவில் அதிகரித்திருப்பதை பொதுவான  அரசியல் நோக்கர்கள் யாரும் தெளிவாகக் கூறுவர். எந்த அளவுக்கென்றால், இந்திய தேசப்பிதாவாகக் கருதப்படும் மஹாத்மா காந்தியே  கூட நிந்திக்கப்பட்ட  நிகழ்வுகளைக் கூட அறிய முடிந்தது. இந்திய பணத்தாளில் காந்தியின் படத்தை நீக்குவதற்குக் கூட அபிப்ராயங்கள் வெளியிடப்பட்டன.

மோடியின் பாசறையான ஆர் எஸ் எஸ் அமைப்பின் பிரமுகர் ஒருவர் காந்தியைக் கொன்ற கோட்சேயின் சிலையை நாடுமுழுவதும் நிறுவிட ஆலோசனை தெரிவித்தார் என்றால் இதன் ஆபத்துகளையும் அளவுகளையும் உணர முடியும்.

அமெரிக்காவில் பேராசிரியராகப் பணியாற்றும் கோபால் என்ற இந்தியர் “என்ன ஆனது என் தேசத்துக்கு?”என்று  அங்கலாய்க்கிறார். இக்கேள்விக்கான விடை இந்தியர்களிடமே உள்ளது. இந்தியர்கள் ‘அழகிய இந்தியா’ என்னும் தங்களின் அபிமான பிம்பத்தை, வெறிகொண்ட மதத்தீவிரவாதிகள் பிய்த்தெறிய அனுமதிக்கப் போகிறார்களா? வெறுப்பையும் துரோகத்தையும் சகிப்பின்மையையும் தங்களை ஆள அனுமதிக்கப் போகிறார்களா?

இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மையில் இருக்கிறது. ஹிந்துக்களாக, முஸ்லிம்களாக, கிறித்தவர்களாக, பார்சிகளாக, பெளத்தர்களாக பல்வகைப்பட்டிருந்தாலும் இந்தியப் பண்பாட்டின் அடிநாதம் இந்த வேற்றுமையில் ஒற்றுமை எனும் காணற்கரிய காட்சி. கோவில்களும், பள்ளிவாசல்களும், சர்ச்களும், குருத்துவாராக்களும் அதன் கட்டட கலைநயம் மிளிரக் காட்சிதரும் இந்தியாவின் கலாச்சாரம் ஒரு பெரும் புதையலைப் போன்றது. தேசப்பிரிவினைக்குப் பிறகும் காப்பாற்றப்பட்ட இந்த நல்லிணக்கம் மீண்டும் சிதற அனுமதிக்கக் கூடாது.

ஜனநாயகத்தன்மை மிக்க, வெளிப்படையான, துணிச்சல்மிக்க ஊடகங்கள் நாட்டில் நிகழ்பவற்றில் மெளனமாயிருக்கலாகாது. நிறைய ஹிந்து அரசியல்வாதிகளே தாங்கள் மாட்டிறைச்சி புசிப்பதாகக் கூறியிருப்பது பாராட்டிற்குரியது. ஆதரவற்ற (சிறுபான்மை) மக்களை மாட்டின் பெயரால் கொல்ல நினைக்கும் கும்பலுக்கு இந்தியர்கள் சொல்ல வேண்டியதெல்லாம்  இந்தியாவின்  ஆயுதவணிகம், நுட்பியல், பொதுவணிக  இறக்குமதிகளெல்லாம் மாட்டிறைச்சி உண்பவர்களிடமிருந்தே வருகின்றன என்பதைத்தான்.

இதில் விநோதம் என்னவென்றால், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்பதுதான். இன்னும் சொல்வதென்றால், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி மேலும் அதிகரித்திருக்கிறது.

என்னைப் பொருத்தவரை, ஆர்.எஸ்.எஸ் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றதே. மதவெறியை ஊக்குவிப்பதில் மனிதர்களைக் கொல்வதில் இரண்டும் இணையானதே.

இந்தியாவின் எண்ணற்ற சிக்கல்களில் மாட்டிறைச்சிக்கான இடம் எது?

வெறுப்பைப் பரப்பும் இந்திய அரசியல்வாதிகள் உண்மையில் செய்ய வேண்டியதெல்லாம் இந்தியாவின் ஆற்றலையும் சக்தியையும் ஊழலுக்கும் ஆரோக்கியமின்மைக்கும் பொதுமக்களின் அளப்பரிய துயரங்களுக்கும் எதிராகப் பயன்படுத்த இந்தியர்களை ஆற்றுப்படுத்துவது தான்.

மஹாத்மா காந்தியின் இலக்கு அதுவாகத் தானே இருந்தது.

(சவுதி அரேபியாவின் பிரபல ஊடகவியலாளரும் இந்தியாவின் நண்பருமான காலித் அல் மயீனா சவுதி கெஸட் இதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)

தமிழில் : பாபு

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*