மசூதிகளை இடிப்போம் என மிரட்டுவதா?: சிங்காலுக்குக் கண்டனம்!

மசூதிகளை இடிப்போம் என மிரட்டுவதா?: சிங்காலுக்குக் கண்டனம்!

சென்னை :  மசூதிகளை இடித்துக் கோயில்கள் கட்டுவோம் என மிரட்டுவது இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான பேச்சு என அசோக் சிங்காலுக்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமகநிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :

“அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்; மாறாக ராமர் கோயில் கட்டுவதைத் தடுத்தால் இந்தியாவிலுள்ள அனைத்து மசூதிகளையும் கோவில்களாக மாற்றுவோம் என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் கூறியிருக்கிறார். இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவை இன்று வரை அனுபவிக்கிறோம். கோத்ரா ரயில் எரிப்பும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை சரி செய்ய முடியாத அளவுக்கு கெடுத்து வைத்துள்ளன. இத்தகைய சூழலில் சங்க பரிவாரத் தலைவர்கள் வார்த்தைகளைக் கொட்டுவதும், அதை ஆட்சியாளர்கள் வேடிக்கைப் பார்ப்பதும் நிச்சயமாக இந்தியாவுக்கு நன்மை பயக்காது. மற்ற மதத்தினரின் அனைத்து சுதந்திரங்களும் பாதுகாக்கப்படும்; மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் யாரும் பேசக்கூடாது என பிரதமர் மோடி இதுவரை இரு முறை கூறியிருக்கும் போதிலும், அதை அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்களும், பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்களுமே கேட்பதில்லை என்பதிலிருந்தே இந்து அமைப்புகளின் ஆதிக்கமும், அதிகாரமும் நாட்டின் பிரதமரையும் தாண்டி வளர்ந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

நாட்டில் கடந்த ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால், மதவாத பேச்சுக்கள், கட்டாய மறு மதமாற்றம், இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதத்தையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் விட மோசமான ஆபத்து மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலான பேச்சுக்கள் தான். இப்பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2014 ஆம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அணிக்கு மக்கள் வாக்களித்ததன் நோக்கமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான். அமைதியும், நல்லிணக்கமும் நிலவினால் மட்டுமே நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதை உணர்ந்து, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி மேற்கொள்ள வேண்டும்.”

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*