மாட்டிறைச்சி சாப்பிடுவேன்: பாஜக அமைச்சர்!

மாட்டிறைச்சி சாப்பிடுவேன்: பாஜக அமைச்சர்!

மிசோரம்: “நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். அதை யாராலும் தடுக்க முடியாது” என பாரதீய ஜனதா கட்சி அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிசோரம் தலைநகர் அய்சாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ,

“அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நான் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் உடையவன். அதைச் சாப்பிடுவதிலிருந்து என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா ஜனநாயக நாடு என்றாலும், வாழ்வியல் முறைகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை யாரும் வெளியிடக் கூடாது” என்று தெரிவித்தார்.

கோமாதா என்ற பெயரில் மாட்டிறைச்சி தடை சட்டத்தைப் பாரதீயா ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியின் மத்திய அமைச்சர் ஒருவரே இவ்வாறு பகிரங்கமாக அறிவித்திருப்பது இவ்விவகாரத்தில் அக்கட்சியின் உள்ளேயே ஒன்றுபட்ட கருத்து இல்லை என்பதையும் இது பாஜகவினுள் உட்கட்சி பூசல் உள்ளது என்பதையும் வெளிக்காட்டுவதாக விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

சில நாட்கள் முன்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “மாட்டிறைச்சி விற்பனை, இந்துக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது. மாட்டிறைச்சியை விரும்புவர்கள், பாகிஸ்தான் அல்லது அரபு நாடுகளுக்குச் சென்று அதனைச் சாப்பிடுங்கள்” என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அக்கட்சியின் உள்ளேயிருந்தே அதுவும் மத்திய அமைச்சர் ஒருவரே மாட்டிறைச்சிக்குச் சாதகமாக கருத்து தெரிவித்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்தார் அப்பாஸ் நக்வியின் கருத்துபடி, மத்திய அமைச்சர் கிரணைப் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க பாஜக முடிவு செய்யுமா என்ற கேள்வியும் அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர். மாட்டிறைச்சி விவகாரம் நாளுக்கு நாள் பாஜகவுக்கு மிகப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி எதுவுமே வாய்த் திறக்காமல் உலக நாடுகள் சுற்றுவதிலேயே கவனமாக இருப்பதும் இந்துத்துவ அமைப்புகளிடம் அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*