Home / அரசியல் / பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா மரணம்!

பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா மரணம்!

Isai Murasu E.M.Haniffaசென்னை:பிரபல இஸ்லாமிய பாடகரும், திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்டவருமான நாகூர் ஹனீபா இன்று சென்னையில் காலமானார்.

சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

இஸ்லாமிய பாடல்களை உலகெங்கும் ஒலிக்கச் செய்து தனது குரலால் பலரது இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் மதங்களை தாண்டி அனைவரையும் கவர்ந்த பாடல்.

திமுகவில் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து மிகுந்த ஈடுபாடு கொண்டு, அக்கட்சியின் வளர்ச்சிக்கு தனது பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தகக்து.

என் ஆருயிர் நண்பனை இழந்துவிட்டேன் – கருணாநிதி உருக்கம்!

Karunanidhiசென்னை: மறைந்த பிரபல பாடகர் நாகூர் ஹனிபாவின் கோட்டூர் புரம் வீட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி அஞ்சலி செலுத்த வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, “எனது ஆருயிர் நண்பரும், எனது இளமை காலத்தில் இருந்து இந்த இயக்கத்திலே என்னோடு சேர்ந்து வளர்ந்தவருமான என்னுடைய அன்புக்குரிய சகோதரர் இசைமுரசு ஹனிபா நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

இயக்கத்திலே அவர் பெற்றிருந்த நற்பெயரையும், தமிழக மக்களிடத்திலே அவர் கொண்டிருந்த அன்பையும் எண்ணி எண்ணி பார்க்கிறேன். அவரையா இழந்து விட்டோம் என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

இசைமுரசு என்று ஒருவரைத்தான் சொல்ல முடியும். அவர்தான் நம்மை விட்டு இன்று பிரிந்து விட்ட, என்னுடைய ஆருயிர் நண்பர் இசைமுரசு ஹனிபா ஆவார்கள். அவரை நாம், மக்கள் மத்தியில் எவ்வளவோ மரியாதையோடும், அன்போடும் நடத்தி இருக்கிறோம். அவரும் அதற்கு நன்றி மறவாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய தொண்டுகளை தன்னுடைய பாடல்கள் மூலமாகவும், இந்த இயக்கத்திற்கு அவர் வழங்கிய தொண்டின் மூலமாகவும் ஆற்றியிருக்கிறார்.

வாணியம்பாடி தேர்தலில் ஹனிபா பாடிப்பாடி அந்த மக்களையெல்லாம் கவர்ந்த காட்சியினை அந்த மக்களில் ஒருவனாக நின்று நானும் ரசித்திருக்கிறேன். ஹனிபாவை பேரறிஞர் அண்ணா பலமுறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.

திமுக வின் எந்த ஒரு மாநாடும், ஹனிபாவின் இசை நிகழ்ச்சி இல்லாமல் தொடங்கியதும் இல்லை. முடிந்ததும் இல்லை. அப்படிப்பட்ட என்னுடைய ஆருயிர் சகோதரரை இழந்து தவிக்கிறேன். நீங்கள் சிந்துகின்ற கண்ணீரோடு என்னுடைய கண்ணீரையும் கலந்து அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். வாழ வேண்டும். வாழ்க, வாழ்க ஹனிபாவினுடைய புகழ்.

இன்று அவர் அமைதி பெற்றிருக்கிறார். அந்த அமைதி தமிழகமெங்கும் தழைத்தோங்க, அவர் பட்டபாடு, ஆற்றிய பணி இவைகள் எல்லாம் நமக்கு துணையாக இருக்கட்டும் என்று கூறி, வாழ்க அனிபா அவருடைய புகழ், ஹனிபா பாடிய அந்த பாடல்கள் என்றென்றும் நம்முடைய காதுகளிலே ஒலித்துக்கொண்டே இருக்கும். நம்முடைய நெஞ்சங்களிலே எதிரொலித்துக்கொண்டே இருக்கும். வாழ்க இசை முரசு ஹனிபா, வாழ்க வாழ்க வாழ்க.” என்று உருக்கமாக கருணாநிதி கூறினார்.

எப்படி மறப்பேன்? – நாகூர் ஹனிபாவுக்கு வைகோ இரங்கல்!

Vaiko with IsaiMurasuசென்னை: நேற்று மரணமடைந்த பிரபல பாடகர் நாகூர் ஹனிபாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளவெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில் இளமைப் பருவத்தில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட நாகூர் அனீபா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அரும்பாடுபட்டார். இயற்கையின் அருட்கொடையாக அவருக்குக் கிடைத்த கம்பீரமும், காந்தமும் நிறைந்த கானக் குரலை, இறைப்பணிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார்.

‘அழைக்கின்றார் அண்ணா’ என ஓங்கி ஒலித்த பாடல், கோடான கோடி தமிழர்களின் இதயங்களில் அண்ணாவைச் செதுக்கியது.

‘ஓடி வருகிறான் உதயசூரியன்’ என்ற பாடல் கழகத்தின் அனைத்து மேடைகளிலும், மாநாடுகளிலும் ஒலித்தது, கழகத்தை வளர்த்தது. இயக்கத்திற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது,

“தமிழ் மணக்கும் திசை எல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவையெல்லாம் அலையவிட்டேன் கண்ணை எங்கே சென்றாய்?எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்?”

என அவர் பாடியதைக் கேட்கும்போது கண்கள் குளமாகும்.

அவரது இசுலாமியப் பாடல்கள், உலகெங்கிலும் வாழும் இசுலாமிய மார்க்கத்தைச் சேர்ந்த தமிழர்களது இல்லங்களில் நாள்தோறும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

அவரது அழைப்பின் பேரில் நாகூரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி, அவரது இல்லத்தில் அன்னாரின் விருந்தோம்பலில் திளைத்த மகிழ்ச்சி என் மனதைவிட்டு என்றும் நீங்காது.

மேலப்பாளையத்தில் இiசு முரசு அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் என் உரையில் அவர் மனம் நெகிழ்ந்தார். திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளில் நான் உரையாற்றிய பின்னர், என் கன்னத்தைப் பிடித்துப் பாராட்டிய பாங்கு மறக்க முடியாதது.

ஈழத்தில் இருந்து நான் திரும்பி வந்தபோது, என்னை உச்சி மோந்து கரங்களைப் பற்றியதை எப்படி மறப்பேன்?

‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற அவரது பாடலையும், ‘கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே’ என்ற அவரது பாடலையும் அதிகாலை வேளைகளில் அவ்வப்போது கேட்பேன். எனது கார்ப் பயணங்களிலும் அவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கும்.

2004 இல் நதிகள் இணைப்புக்காக நான் நடைபயணம் சென்றபோது நாகூரில் எனக்கு வரவேற்புக் கொடுத்து, அரபு நாட்டில் அவருக்கு வழங்கப்பட்ட வெண்பட்டு ஆடையை அணிவித்து மகிழ்ந்தார்.

இசை முரசு அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது கானக்குரலும், பாடல்களும் என்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்; காலத்தை வென்று நிற்கும்.

அவரை இழந்து துயரத்தில் தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top