Home / பிற மதத்தவர்களுக்கு / இறுதி நபியின் இறுதி பேருரை

இறுதி நபியின் இறுதி பேருரை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இறுதி நபியின் இறுதி பேருரை

அன்று ஹிஜ்ரி 10 துல்ஹஜ் 9ம் நாள்
கூடியிருந்த நபித்தோழர்களின் எண்ணிக்கை 124,000 – 133,000 பேர்கள்
இடம்: முதல் உரை அரஃபா பெருவெளியில்
நபியவர்கள் ஏறத்தாழ 17 விஷயங்கள் பற்றி தங்களின் 3 உரைகளில் குறிப்பிட்டார்கள்:
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. அவனையே புகழ்கின்றோம். அவனிடமே உதவி கோருகின்றோம். அவனிடமே பிழை பொறுக்கத் தேடுகின்றோம். எங்களில் தோன்றும் தீமைகளை விட்டும், எங்கள் செயல்களில் ஏற்படும் கெடுதிகளை விட்டும் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். எவனை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறானோ அவனை வழி தவறச் செய்யவும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனை நேர்வழிப்படுத்தவும் எவராலும் முடியாது. அல்லாஹ்வை அன்றி வேறெந்த இரட்ஷகனுமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரென்றும் அவனடைய தூதர் என்றும் நான் சான்று பகர்கிறேன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென உபதேசிக்கிறேன்.
அருமை மக்களே கேளுங்கள்:
இந்த ஆண்டிற்குப் பிறகு இதே இடத்தில் இனி உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெறுவேனா என நான் அறியேன்.
எச்சரிக்கை: நீங்கள் உங்கள் ரப்பை சந்திக்கும் வரையில் இந்த நாள், இந்த மாதம், இந்த நகரம் எவ்வளவு புனிதமானதோ அதே அளவு உங்களின் ஒவ்வொருவரின் உயிரும், உடமையும், மானமும் மற்றவர்களுக்குப் புனிதமாகும்.
நிச்சயம் நீங்கள் உங்கள் ரப்பை சந்திப்பீர்கள். அப்பொழுது உங்களின் இவ்வுலக செயல்கள் பற்றி விசாரிக்கப்படும்.
எவர் அமானிதப் பொருளை தன்னிடம் வைத்திருக்கிறாறோ அதை உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடவும்.
எவர் குற்றம் புரிந்தாரோ அவர் மட்டுமே அக்குற்றத்திற்கு பொறுப்பாளியாவர். மகன் செய்த தவறுக்கு தந்தையோ, தகப்பன் செய்த தவறுக்கு மகனோ பொறுப்பாளியாகமாட்டார்.
கேட்டுக்கொள்ளுங்கள்:
அறியாமைக்கால பழக்கங்கள் அனைத்தும் என் கால்களுக்கு கீழே விழுந்து விட்டன.
அறியாமைக்கால வட்டீகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் வட்டியை செல்லாதது ஆக்குகிறேன். தள்ளுபடி செய்கிறேன்.
அறியாமைக் கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு விட்டன. இனி பழய கொலைக்குப் பழிவாங்குதல் எவர்க்குமில்லை. அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தார் ரபீஆ பின் அல் ஹாரித் உடைய மகனுக்கான ரத்தப்பழியை ரத்துச் செய்கிறேன். செல்லாததென அறிவிக்கிறேன்.
கொலைக்கு கொலைதான் சட்டம். தவறுதலாக நடந்துவிடும் கொலைக்கு கொலைகாரர் 100 ஒட்டகைகளை நஷ்டயீடாக கொலையுண்டவரின் வாரிசுக்கு தரவேண்டும். நஷ்டயீட்டை அதிகப்படுத்துவது அறியாமைக் கால செயலாகும்.
மேலும் மக்களே கேட்டுக்கொள்ளுங்கள்:
உண்மை நிலைநாட்டப்பட்டபின் ஷைத்தான் இம்மண்ணில் இனி நாம் ஒருபோதும் வணங்கப்படுவோம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டான். ஆனால், கவனம் மார்க்கத்தில் நீங்கள் கருதும் சின்ன சின்ன அமல்களை செய்யமல் விடுவது ஷைத்தானுக்கு கட்டுப்படுவதாகும். அதனால் அவன் மகிழ்ச்சி அடைகிறான்.
அன்பு மக்களே:
உங்கள் பெண்கள் மீது உங்களுக்கும், உங்கள் மீது அவர்களுக்கும் சில உரிமைகள் உண்டு. உங்கள் படுக்கையில் உங்களைத்தவிர வேறு யாரையும் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் விரும்பாத எவரையும் உங்கள் வீட்டினுல் அவர்கள் அனுமதிக்கக்கூடாது. அவர்கள் வெளிப்படையான – மானக்கேடான காரியத்தில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் அல்லாஹ் உங்களுக்கு அவர்களைத் தண்டிக்க அனுமதி வழங்கியுள்ளான். முதலில் அவர்களை உங்கள் படுக்கையிலிருந்து விலக்கி வைத்து, காயம் ஏதும் ஏற்படாமல் அவர்களை அடியுங்கள். அவர்கள் இந்த இழிசெயலிருந்து விலகி விட்டால் அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் அளிப்பது உங்கள் மீது கடமையாகும். நிச்சயமாக அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். அவர்கள் தம் மன விருப்பப்படி செயல்படக்கூடாது.
நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் அமானிதமாக உங்கள் மனைவியர்களாக ஆக்கியுள்ளீர்கள். மேலும் அல்லாஹ்வின் அனுமதியுடனேயே அவர்களை அனுபவித்தீர்கள். எனவே, பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். சரியான வழியில் அவர்களை பயிற்றுவியுங்கள்.
அருமை மக்களே!
அறிந்துக் கொள்ளுங்கள். இறைக் கட்டளைகளை முழுமையாக உங்களுக்கு அறிவித்து விட்டேன்.
கேட்டக்கொள்ளுங்கள்! மாதங்களை மாற்றுவது நிராகரிப்பின் வழியாகும். ஒரு மாதத்தை ஒரு வருடத்தில் புனிதமானதாக்கி அதே மாதத்தை மறு வருடம் புனித மற்றதாக்குவது வழிகேட்டில் மேலும் விழுவதாகும். மாதங்களின் எண்ணிக்கையை கூட்டி குறைப்பது இறைநிராகரிப்பாளர்களின் செயலாகும். இறைவன் வானம் பூமியை படைத்த காலத்திற்கு நிச்சயம் உலகம் திரும்பி விட்டது. நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் 12 ஆகும். வுhனம், பூமி படைக்கப் பட்டபோதே அல்லாஹ் இதை தன் பலகையில் பதித்து விட்டான். அவைகளில் 4 மாதங்கள் புனிதமானவை. 3 தொடர்ந்து வருபவை. (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம்) 4 வது மாதம் ரஜப். ( ஜமாதுல் ஆகிர் – ஷஃபானுக்கு இடையில் வருவது)
மேலும் கேட்டுக் கொள்ளுங்கள்!
நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர் ஆவார். எனவே, தன் சகோதரரின் அனுமதியின்றி அவரின் பொருளை எடுத்து அனுபவிப்பது ஆகுமானதல்ல.
அருமை மக்களே கேட்டுக்கொள்ளுங்கள்!
அல்லாஹ்வின் கட்டளைகளை நான் அறிவித்து விட்டேன். அல்லாஹ்வே நீயும் கூட இதற்கு சாட்சி.
கவனமாய்க் கேளுங்கள்!
எனக்குப்பின் நிராகரிப்பின் பக்கம் சென்று விடாதீர்கள். வழி கெட்டவர்களாய் மாறி விடாதீர்கள்.
ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்துக் கொள்ளாதீர்கள்.
நான் உங்களிடையே ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமும் அவன் தூதரின் வழிமுறையாகும்.
அருமை மக்களே !
உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. நீங்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்களே. அவர் மண்ணினால் படைக்கப்பட்டவர்.
அறிந்துக்கொள்ளுங்கள்!
ஓர் அரபிக்கு அரபி அல்லாதவரைவிடவோ ஒரு அரபி அல்லாதவருக்கு ஒரு அரபியை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையுமில்லை. அதே போல ஒரு கருப்பு நிறத்தவரை விட சிகப்பு நிறத்தவரோ அல்லது ஒரு சிகப்பு நிறத்தவர் கருப்பு நிறத்தவரை விடவோ எந்த உயர்வுக்கும் உடையவர் இல்லை. சிறப்பும் மேன்மையும் எவர் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறாரோ அவருக்கே உரியது.
அறிந்துக் கொள்ளுங்கள்!
நான் அறிவிக்க வேண்டியதை அறிவித்து விட்டேன். யா அல்லாஹ்! நீயும் இதற்கு சாட்சி.
இறுதி நாளில் இறைவன் உங்களிடம் என்னைப்பற்றி கேட்டால்.. நீங்கள் என்ன சொல்வீர்கள்? ‘தாங்கள் இறைவனின் செய்தியை முழுமையாக விளக்கி எத்தி வைத்து விட்டீர்கள், உங்கள் கடமையை வாய்மையாக நிறைவேற்றி விட்டீர்கள்’ என்று நாங்கள் சொல்வோம்.
நபியவர்கள் வானத்தை நோக்கி தங்கள் விரலை உயர்த்தி 3 முறை இறiவா! ‘நீயும் இதற்குசாட்சியாக இரு’ என்று கூறினார்கள்.’
இங்கு வந்திருப்போர்கள் இந்தச் செய்திகளை இங்கு வராதவர்களுக்கு எத்தி வையுங்கள். ஒருகால் இங்கு வர வாய்ப்பில்லாதவர்கள் இவைகளை அறியும் போது இங்கு வந்திருப்பவர்களைவிட, சிறப்பாக அவற்றை விளங்கி செயல்படுத்தலாம்.
மேலும் கேட்டுக்கொள்ளுங்கள்:
ஒவ்வொரு வாரிசுதாரர்க்கும் அவரின் வாரிசுரிமையை அல்லாஹ் நிர்ணயம் செய்துள்ளான்.
எந்த படுக்கையில் குழந்தை பிறக்கிறதோ அந்த படுக்கையின் சொந்தக் காரனுக்குத்தான் அந்த குழந்தை உரியது. விபச்சாரம் புரிந்தவரை கல்லெறிந்து கொன்று விடுங்கள்.
பெற்ற தந்தையை விட்டு விட்டு மற்றவரை தன் தந்தை என்று கூறுவதையும், தன் சொந்த எஜமானனை விட்டு விட்டு மற்றவனை தன் எஜமானன் என்று கூறுபவரையும் அல்லாஹ்வும், வானவர்களும் மற்ற மனிதர்கள் அனைவரும் சபிக்கின்றனர். மறுமையில் அவர்களின் எந்த சமாதானமும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. அல்லாஹ்வின் பாதுகாப்பும் அவனது அருளும் உங்கள் மீது நிலவட்டும்.

நபியவர்களின் உரையை திரும்ப மக்களுக்கு உரக்கச் சொல்லி எத்தி வைத்தவர் ரபீஆ இப்னு உமைய்யா பின் கலப் (ரலி). பிறகு கீழ்கண்ட வசனம் அருளப்பட்டது. (5:3)
‘இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டேன்’
அடுத்த நாள் மினாவில் வைத்து நபியவர்கள் ஆற்றிய இரண்டாம் உரை (துல்ஹஜ் 10 ம் நாள்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தபின் தொடர்ந்து கூறினார்கள்:
அருமை மக்களே! கவனமுடன் கேளுங்கள்!!
எனக்குப்பின் இனி நபியில்லை. உங்களுக்குப்பின் புதிய சமுதாயம் படைக்கப் பட மாட்டாது. எனவே கவனமுடன் கேட்டுக்கொள்ளுங்கள்.
அல்லாஹ்விற்கு முற்றிலும் அடிபணிந்து விடுங்கள். தினம் 5 வேளை தொழுகையை பேனுங்கள். ரமலானில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். விருப்பமுடன் ஜகாத்தை வழங்கி விடுங்கள். உங்கள் ரப்புடைய கஃபாவிற்குச் சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்.
உங்களை அல்லாஹ்வின் வேதப்படி ஆளுகின்றவரை உங்கள் நிர்வாகிக்கு – அவர் அபிசீனிய அடிமையாயிருப்பினும் சரியே – கட்டுப்படுங்கள். உங்கள் ரப்பின் சுவனத்தில் நுழைவீர்கள்.
இம்முறை அலீ பின் அபிதாலிப் (ரலி) அவர்கள் நபியவர்களின் உரையினை திரும்ப மக்களுக்கு உரத்த குரலில் எத்தி வைத்தார்கள்.
மதீனா திரும்பும் வழியில் அல் ஜூஹூஃபா அருகில் நபியவர்கள் துல் ஹஜ் 11 ல் ஆற்றிய மூன்றாம் உரை:
வழக்கம் போல் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்தபின், இனி நான் ஒன்றைச் சொல்லியாக வேண்டும்:
என்னதான் இருந்தாலும் நானும் மனிதன்தான். அநேகமாக விரைவிலேயே அல்லாஹ்விடமிருந்து எனக்கு அழைப்பு வரும். நிச்சயம் அந்த அழைப்பை மகிழ்வுடன் வரவேற்பேன்.
அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் அல் மஸீஹூத் தஜ்ஜாலைப் பற்றி தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாருக்கு அவனைப்பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகைத் தந்த இறைத்தூதர்களும் அவனைப்பற்றி தத்தம் சமுதாயத்தார்க்கு எச்சரித்தனர்.
மேலும் என் சமுதாயத்தாரான உங்களிடையேதான் (இறுதி காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது அடையளத் தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்கு புலப்படாமல் போனாலும் நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்கு தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதை மும்முறை கூறினார்கள். உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன், அவனோ (தஜ்ஜாலோ) வலது கண் குருடனாவான். அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும்
நான் உங்களிடையே இரண்டு பொருப்புகளை ஒப்படைப்பேன். ஒன்று அல்லாஹ்வின் வேதம். அறிவுரைகளும் வழிகாட்டுதலும் அடங்கிய ஒன்று. அதை வாய்மையுடன் பின்பற்றி பயன் பெறுங்கள். இரண்டு என் வழிமுறை.
குறிப்பு: பல்வேறு நூல்களில் (புஹாரி, முஸ்லிம், நஸயீ, திர்மி) காணப்படும் மூலங்களின் மொழி பெயர்ப்பு).

ஆக்கம்: கே. தாஜூதீன் MA அவர்கள்

 

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top