Home / கல்வி / அரசு மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி

அரசு மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி

சமூக அந்தஸ்து, மதிப்பு, மரியாதை, சுழல்விளக்கு கார், கை நிறைய சம்பளம் – இவை இன்றைய இளைஞர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு சக்திகள். என்னதான் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாப்ட்வேர் என்ஜினியர் பணியில் லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கினாலும் அரசு துறையில் இளம் வயதில் உயர்ந்த பதவி வகிப்பது என்பது தனி சுகம்தான்.

முயற்சியும் பயிற்சியும்

சமீப காலமாக சாப்ட்வேர் என்ஜினியர்கள் பலரும் கைநிறைய சம்பளம் தரும் வேலையை விட்டு விட்டு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களில் ஏராளமானோர் வெற்றி யும் பெற்றுவருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. வசதி-வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற பழைய கருத்துகள் மறைந்து முயற்சியும், பயிற்சியும் உடைய யார் வேண்டுமானாலும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற உன்னத நிலை உருவாகி இருக்கிறது.

தடைகளை தகர்த்து சாதனை

கடந்த சில ஆண்டுகளாக கூலித் தொழிலாளியின் மகன்களும், மகள்களும், விவசாயி, நெசவாளி பிள்ளைகளும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றுவருவதே இதற்குச் சான்று. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு ஏராளமான தனியார் மையங்கள் பயிற்சி அளித்து வருகின்றன. தனியார் பயிற்சி மையங்களில் பணம் கட்டி படிப்பது ஏழை மாண வர்களால் இயலாது.

கைதூக்கிவிடும் அரசு பயிற்சி மையம்

அத்தகைய ஏழை மாணவர்க ளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும், தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தி லும் செயல்பட்டு வருகிறது தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம். இந்த மையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்தில் இயங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வுக்கு 200 பேருக்கு முழு நேர பயிற்சியும், 100 பேருக்கு பகுதி நேர பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அனைத்தும் இலவசம்

முழுநேர பயிற்சியில், உணவு, தங்கும் இடம், பயிற்சி அனைத்தும் இலவசம். பொதுப் பிரிவினர் மட்டும் பயிற்சி கட்டணமாக ரூ.1000 மட்டும் செலுத்த வேண்டும். பகுதி நேர பயிற்சிக்கான வகுப்புகள் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர மும் நடைபெறும். இந்த பயிற்சிக்கு ஒட்டுமொத்த கட்டணமாக ரூ.3000 மட்டும் வசூலிக்கப்படும்.

நுழைவுத் தேர்வு

முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கு தகுதியான நபர்கள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்பார்கள்.

2014-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்த இருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு பயிற்சி மையம் முதல்நிலைத் தேர்வுக்கு 8 மாத காலம் பயிற்சி அளிக்க உள்ளது. வரும் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கும் பயிற்சி அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். இந்த பயிற்சியில் சேர மாணவ-மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படு கின்றன. 21 வயது முதல் 30 வயது வரையுள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர், பழங்குடியின வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 15-ந் தேதி ஆகும். நுழைவுத் தேர்வு நவம்பர் மாதம் 10-ந் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சிதம்பரம், சேலம், வேலூர், சிவகங்கை, தஞ்சாவூர், தர்மபுரி ஆகிய 11 மையங்களில் நடைபெறும். நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

49 பேர் வெற்றி

கடந்த ஆண்டு இந்த பயிற்சி மையத்தில் படித்தவர்களில் 49 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்றனர். அவர்களில் 14 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.எப்.எஸ். (இந்திய வெளிநாட்டு பணி), 4 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும் கிடைத்துள்ளதாக அரசு பயிற்சி மையத்தின் முதல்வர் பேராசிரியை பி.பிரேம்கலாராணி தெரிவித்தார்.

About admin_igc_Javith

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top